சவுதி அரேபியாவில் இனி பெண்களும் செய்தி வாசிக்கலாம்! - வரலாற்றில் இடம்பிடித்த பெண் | First Saudi woman presents main news on Saudia TV

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (22/09/2018)

கடைசி தொடர்பு:08:30 (22/09/2018)

சவுதி அரேபியாவில் இனி பெண்களும் செய்தி வாசிக்கலாம்! - வரலாற்றில் இடம்பிடித்த பெண்

சவுதி அரேபியாவில் முதல்முறையாகப் பெண்கள் செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

சவுதி அரேபியா

PhotoCredit : twitter/@raljidani

சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக, மன்னர் சல்மானின் இளைய மகனான முகமது பின் சல்மான் சமீபத்தில், பொறுப்பேற்றுக்கொண்டார் . இவர் இளவரசராகப் பதவியேற்ற பின், அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதன் படி பெண்கள் கார் ஓட்ட அனுமதி, சவுதியில் திரையரங்கம், விண்வெளி திட்டம் போன்றவை அதிரடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது அந்நாட்டு பெண்கள் மற்றுமொரு மைல் கல்லையும் எட்டியுள்ளனர். சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் செய்தி வாசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, `சவுதியா' என்ற தேசிய தொலைக்காட்சியில், வீம் அல் தஹீல் (Weam Al-Dakheel) என்ற பெண் செய்தி வாசித்து, அந்நாட்டில் முதல்முறையாக செய்தி வாசித்த பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். தினமும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும், முக்கிய செய்திகளை வாசிக்க மட்டும் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவரின் சாதனையை சவுதியா தன் ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடி வருகிறது. முன்னதாக அல் தஹில் சி.என்.பி.சி அரேபியா என்ற பத்திரிக்கையில், பயிற்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.