`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது!’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி | Disappointed at the arrogant and negative response by India says imran khan

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (22/09/2018)

கடைசி தொடர்பு:19:30 (22/09/2018)

`இந்தியாவின் எதிர்மறை பதில் ஏமாற்றமளிக்கிறது!’ - அமைதிப் பேச்சு குறித்து இம்ரான் கான் அதிருப்தி

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நடக்கவிருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இம்ரான் கான்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நாள்முதல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் வகையில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் இம்ரான் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, நியூயார்க் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஐ.நா சபைக் கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில், வீட்டுக்குள் புகுந்து 3 போலீஸாரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவர்களைக் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்தனர். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதே நேரத்தில், இந்தியப் பாதுகாப்பு படையால் கடந்த 2016-ம் ஆண்டில் கொல்லப்பட்ட தீவிரவாதியான புர்ஹான் வானியை போற்றும் வகையில், பாகிஸ்தான் அரசு சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது. பாகிஸ்தான் அரசின் இந்தச் செயல் இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்தது. இதனால், அடுத்த வாரம் நடக்கவிருந்த இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையைக் கைவிடுவதாக இந்தியா அறிவித்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இம்ரான் கான், மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர், `இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக நான் எடுத்த முயற்சிக்கு இந்தியாவின் ஆணவம் மற்றும் எதிர்மறை பதிலானது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், சிறிய மனிதர்கள் பெரிய அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளதையும், அவர்கள் பரந்த தொலைநோக்குடன் எதையும் பார்ப்பதில்லை என்பதையும் எனது வாழ்நாளின் பெரும்பகுதிகளில் பார்த்து வந்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.