வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (23/09/2018)

கடைசி தொடர்பு:10:51 (23/09/2018)

லேக் விக்டோரியாவில் படகு கவிழ்ந்த விபத்து - 209 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள லேக் விக்டோரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 209 பேர் உயிரிழந்துள்ளனர். 

படகு விபத்து

PhotoCredits : Twitter/@haseebsl98

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, உகாண்டா, போன்ற நாடுகளுக்கு இடயே லேக் விக்டோரியா என்ற மிக பெரிய ஏரி உள்ளது. கடந்த 20-ம் தேதி தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து சுமார் 400 பயணிகளுடன் புறபட்ட படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதல் நாளில் மட்டும் 40 பேர் உயிரிழந்ததாக கூறபட்டது. 

இதையடுத்து ராணுவ நீர் மூழ்கி நீச்சல் வீரர்கள், மீனவர்கள், போலீஸார், மீட்புப் படையினர், தனியார் அமைப்பினர் உள்ளிட்டவர்கள் இரண்டு நாள்களாகத் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று வரை நடைபெற்ற மீட்பு பணிகளில் சுமார் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் மீட்கபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 172 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மோசமான பராமரிப்பு, சிறிய படகில் அதிகப்படியான பயணிகளை ஏற்றியது போன்றவையே விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாடு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.