வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (23/09/2018)

கடைசி தொடர்பு:11:05 (23/09/2018)

இஸ்ரேல் குழந்தைகள் இந்திய ராணுவம் பற்றி பாடம் படிப்பது ஏன்? #Haifaday

அதிரடிக்குப் பெயர் போன இஸ்ரேலில் குழந்தைகள் இந்திய ராணுவம் பற்றி வரலாற்றுப் பாடம் படிப்பதன் பின்னணி என்ன?

இஸ்ரேல் குழந்தைகள் இந்திய ராணுவம் பற்றி பாடம் படிப்பது ஏன்? #Haifaday

பிற்காலத்தில் எதிரியாவான் எனத் தெரியவந்தால் அவனைக் கருவிலேயே அழித்துவிடும் `மொஸாட்' (Mossad); உலகுக்கே விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுத்த நாடு; பாலைவன நாடாக இருந்தபோதிலும் ஆச்சர்யப்படும் விதத்தில் விவசாயத்தில் தன்னிறைவு; சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள் இருந்தாலும் `தனி ஒருவன்'; தன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டால் 9 பேரைக் கொல்லும் அதிரடி... இப்படியெல்லாம் இஸ்ரேல் நாட்டைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அமெரிக்கா போலவே சர்வவல்லமை பொருந்திய இந்த நாடு, பலம் வாய்ந்த ராணுவத்தையும் வைத்துள்ளது.

யுவன் யுவதிகளுக்கு ராணுவப் பயிற்சி கட்டாயம். கரு உருவானாலே இஸ்ரேலிய தாய் குறிப்பிடத்தக்க விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிட வேண்டும். அப்படிப் பின்பற்றினால்தான் குழந்தைகள் அறிவாளியாகவும் பலசாலியாகவும் பிறக்கும் என்று இஸ்ரேலிய மக்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நாட்டின் குழந்தைகள், இந்திய ராணுவ வீரர்கள் பற்றி பாடம் படிக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே! இதன் பின்னணி சுவாரஸ்யம் நிறைந்தது. 

ஹாஃபியா நகரில் இந்திய ராணுவ வீரர்கள்

1900-ம் ஆண்டு தற்போது இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரம், துருக்கியின் ஒஸ்மான் ஆட்சியாளர்களின் பிடியில் இருந்தது. ஜெர்மனியின் ஆதரவுடன் துருக்கி ஆட்சியாளர்கள் ஹைஃபா நகரில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்தனர். ஹைஃபாவில் இயற்கைத் துறைமுகம் இருந்த காரணத்தால், இந்த நகரம் மீது ஜெர்மனிக்கு ஒரு கண். ஹைஃபா மக்கள், துருக்கி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலைப் பெற போராடிக்கொண்டிருந்தனர். 1918-ம் ஆண்டு முதலாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம் அது. ஜெர்மனிக்கு ஆதரவாக இருப்பதால், துருக்கி ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்ட பிரிட்டனும் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது. 

பிரிட்டன் ஆண்ட இந்தியாவின் 15-வது காவல்ரி பிரிகேட் படையினர் ஹைஃபா நகருக்கு அனுப்பப்பட்டனர். ஹைதராபாத், மைசூர், ஜோத்பூர் நகரங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இணைந்த குழு இது. குதிரையில் சென்று நீண்ட கத்தி போன்ற பிரத்தியேகப் போர் கருவியைக்கொண்டு போரிடுவதில் வல்லவர்கள். அப்போது இஸ்ரேல் நாடு உருவாகவில்லை. பாலஸ்தீனம்தான். இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 400 வீரர்கள் பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்டனர். 

கடந்த 1918-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி, இந்திய காவல்ரி படை மேஜர் தல்பாத்சிங் தலைமையில் ஹைஃபா நகரைத் தாக்கியது. துருக்கி மற்றும் ஜெர்மனிப் படை வீரர்கள் இந்த அதிரடித் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் அவர்களிடம் நவீன துப்பாக்கிகள் இருந்தன. ஹைஃபா நகரில் 1,500 துருக்கி மற்றும் ஜெர்மனி வீரர்கள் இருந்தனர். போர்க்களத் திட்டமிடுதலில் இந்தியப் படையினர் முன் நிற்க முடியாமல் அவர்கள் தோற்று ஓடினர். இயந்திரத் துப்பாக்கியால்கூட குதிரையில் அணி அணியாக வந்த இந்திய வீரர்களை நிறுத்த முடியவில்லை. போரின் முடிவில் ஹைஃபா நகருக்கு விடுதலைக் கிடைத்தது. களத்தில் 44 இந்திய வீரர்கள் பலியாகினர். இவர்களின் உடல்கள், இஸ்ரேல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டன. 

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 23-ம் தேதி ஹைஃபா தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஹைஃபா நகரம் விடுதலை பெற்று தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது. இந்திய வீரர்களின் வீரத்தைப் பறைசாற்றும்விதமாக ஹைஃபா நகரில் போர் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் ஹைஃபா நகர மேயர் தலைமையில் மக்கள் இங்குக் கூடி இந்திய வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். இஸ்ரேலிய குழந்தைகள் இந்தியர்களின் தியாக வரலாறு பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய ராணுவ வீரர்களின் ஹைஃபா வெற்றி பற்றிய பாடமும் இடம்பெற்றுள்ளது. 

இஸ்ரேல் ஹாஃபியா போர் நினைவுச் சின்னம்

ஹைஃபா நகர மேயர் யோனா யாகவ், ``மேஜர் தல்பாத் சிங், எங்களுக்கு மட்டும் சுதந்திரம் வாங்கித் தரவில்லை; இந்த மத்திய கிழக்குப் பகுதியின் தலையெழுத்தையே மாற்றியிருக்கிறார். 100 ஆண்டுகள் நிறைவடைவதால், இந்த ஆண்டு ஒரு வாரகாலம் விழா கொண்டாட முடிவுசெய்துள்ளோம். இந்திய ராணுவ வீரர்கள், அந்நிய தேசத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். அவர்களின் தியாகம் என்றும் போற்றப்படக்கூடியது. அதனால்தான் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது'' என்றார். 

முதலாம் உலகப்போரில் இஸ்ரேல் நாட்டில் பெற்ற வெற்றியை இந்தியாவும் மறந்துவிடவில்லை. ஜோத்பூர், மைசூர் லேன்ஸ்ர்ஸ் தற்போது இந்திய ராணுவத்தின் 61-வது காவல்ரி ரெஜிமென்ட்டாக உள்ளது. ஒவ்வொரு செப்டம்பர் 23-ம் தேதியும், இந்த ரெஜிமென்டில் ஹைஃபா தினம் கொண்டாடப்படும்.

1922-ம் ஆண்டு இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும்வகையில் டெல்லியில் போர் வெற்றி நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியா வந்தபோது, அங்குச் சென்று மரியாதை செலுத்தினார். தற்போது இந்த நினைவுச்சின்னத்துக்கு `தீன்மூர்த்தி ஹைஃபா சவுக்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்