வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (24/09/2018)

கடைசி தொடர்பு:12:20 (24/09/2018)

விண்கல்லில் ரோவர்களைத் தரையிறக்கி அசத்தல்!- உலக சாதனை படைத்தது ஜப்பான்

ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை, இரண்டு ரோவர்களை விண்கல் மீது தரையிறக்கிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது. 

ரோவர்

PhotoCredits : Twitter/@InnovationStew

பூமியில் இருந்து 170 மில்லியன் தொலைவில் உள்ள ரையுகு (Ryugu) விண்கல்லின் மாதிரிகளைச் சேகரிக்க, கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை (Japan Aerospace Exploration Agency) ஹயாபுசா - 2 (Hayabusa2) என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், கடந்த ஜூன் மாதம் ரையுகுவை சென்றடைந்தது. இதையடுத்து, ஹயாபுசா தாங்கிச் சென்ற மினேர்வா-ll-1 (Minerva-II-1) என்ற இரண்டு ரோவர்கள் வெற்றிகரமாக விண்கல்லில் தரையிறக்கப்பட்டதாக JAXA அறிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றிலேயே முதல்முறையாக, விண்கல்லில் ரோவரைத் தரையிறக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளது ஜப்பான். இந்தப் புகைப்படங்களை JAXA தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை, ‘ஹயாபுசா விண்கலம்மூலம் மூன்று செயல்முறைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சேகரிக்கும் விண்கல் மாதிரிகளின்மூலம் சூரியக்குடும்பத்தின் துல்லிய வயது, புவி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும் என்பதைக் கணிக்க சில தடையங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரையுகுவில் இறக்கப்பட்ட ரோவர், சமதளத்தில் பயணிக்க சரியான இடத்தை விஞ்ஞானிகள் தேடிவருகின்றனர். அடுத்த மாதத்துக்குள், இது சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட ஹயாபுசா விண்கலம், 2020-ம் ஆண்டு பூமிக்கு வந்தடைய உள்ளது.