எதிர்க்கட்சி வேட்பாளர் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி! வாழ்த்திய இந்தியா | Maldives' Opposition Presidential Candidate Victory! India congratulate his victory

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (24/09/2018)

கடைசி தொடர்பு:14:54 (24/09/2018)

எதிர்க்கட்சி வேட்பாளர் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி! வாழ்த்திய இந்தியா

மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கு இந்தியாவும், அமெரிக்காவும் வாழ்த்து தெரிவித்துள்ளன. 

மாலத்தீவு

மாலத்தீவில் அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அப்துல்லா யாமீனை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் இப்ராஹிம் முகமது சோலிஹ் என்பவரைக் களம் இறக்கின. இவர், 58.4 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்துல்லா யாமீன் 41.6 சதவிகித வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார். 

அப்துல்லா யாமீன், 2013-ம் ஆண்டு முதல் மாலத்தீவின் அதிபராக இருந்து வருகிறார். இவரது ஆட்சிக்காலத்தில், தனது அரசியல் எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைத்தும், அவரச நிலையை அறிவித்தும், தனக்கு எதிராக நீதி வழங்கிய நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும் அடக்குமுறை ஆட்சி செய்து வந்தார். `இவர் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். சீனாவிடமிருந்தும், சவுதி அரேபியாவிடமிருந்தும் தேவையில்லாமல் கடன் வாங்குகிறார்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் இந்தியாவும் உன்னிப்பாகக் கவனித்த வந்த நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மாலத்தீவு அதிபர் தேர்தலில் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றிக்குப் பாராட்டுகள். விரைவில் தேர்தல் ஆணையம் அவரது வெற்றியை முறைப்படி அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.