வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (24/09/2018)

கடைசி தொடர்பு:20:45 (24/09/2018)

`புதிய மார்ஸ் ரோவருக்கு ஒரு பேர் வைங்க!’ - மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த நாசா

நாசா (NASA) அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வரும் பெரு நிறுவனங்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாசாவால் அடுத்ததாகச் செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ள மார்ஸ் ரோவருக்கு பெயரைப் பரிந்துரைக்குமாறு தன் பங்குதாரரான ஜெட் புரபல்ஷன் லேபரட்டரி உடன் இணைந்து போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் கே-12 கிரேடுடன் இருப்பவர்கள் புதிய மார்ஸ் ரோவருக்குப் பெயர் வைத்து ஒரு கட்டுரையை எழுதி நாசாவுக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெறுபவர் நாசாவின் மார்ஸ் ரோவர் 2020-ல் நாசாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார். நாடு முழுவதும் இருக்கிற மாணவர்களில் இருந்து தங்கள் கனவு திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் நபரைச் சரியாக தேர்வு செய்ய முனைப்பு காட்டி வருகிறது நாசா. 

புதிய மார்ஸ் ரோவர்

``1997-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட முதல் மாஸ் ரோவரிலிருந்து பெயரிடும் போட்டியை நாங்கள் நடத்தி வருகிறோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள்” என்கிறார் நாசா தலைமை அலுவலக இணை நிர்வாகி தாமஸ் ஸர்புசென். 

மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை அக்டோபர் 9-க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது நாசா. பெயரிடப்பட்டு, தொழில்நுட்ப பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதும், நாசாவின் ஏவுதளமான ப்ளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரிலிருந்து 2020 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் புதிய மார்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.