‘லட்சக்கணக்கான மக்களின் வறுமையை விரட்டிய இந்தியா’ - ஐ.நா-வில் பாராட்டிய ட்ரம்ப் | US President Donald Trump says india has successfully lifted millions of its citizens out of poverty

வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (26/09/2018)

கடைசி தொடர்பு:07:59 (26/09/2018)

‘லட்சக்கணக்கான மக்களின் வறுமையை விரட்டிய இந்தியா’ - ஐ.நா-வில் பாராட்டிய ட்ரம்ப்

'இந்தியாவில், வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த லட்சக்கணக்கான மக்கள், நடுத்தர மட்டத்துக்கு உயர்ந்துள்ளனர்' என இந்திய அரசாங்கத்தை பாராட்டிப் பேசியுள்ளார், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது பேசிய ட்ரம்ப், இந்தியாவை உதாரணமாக எடுத்துக்காட்டிப் பேசியுள்ளார். 

வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில், லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளனர். இதனால், மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவில், ஒரு சுதந்திரமான சமுதாயம் உள்ளது. அதனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்த மக்கள் நடுத்தர மட்டத்துக்கு உயர முடிந்துள்ளது. 2005 -2006 மற்றும் 2015-2016 ஆண்டுகளுக்கு இடையிலான 10 ஆண்டுகளில், 27 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று பேசிய அதிபர், `இந்தியாவின் வறுமை விகிதம் 55 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது' என்று சுட்டிக்காட்டி, இந்தியாவைப் பாராட்டியுள்ளார்.