விவசாயிகளின் போராட்டத்தால் முடங்கியது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்!  | bullet rail project stop due to farmers continues protesting

வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (27/09/2018)

கடைசி தொடர்பு:08:10 (27/09/2018)

விவசாயிகளின் போராட்டத்தால் முடங்கியது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்! 

பிரதமர் மோடி, மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து அடிக்கல் நாட்டினர். இந்தத் திட்டம் விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் முடங்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

புல்லட் ரயில்

மும்பை - அகமதாபாத் இடையே ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி தருவதற்கு ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும், பிரதமர் மோடியும் இணைந்து இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினர். 

இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, `சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில் சேவையை மேம்படுத்தாமல், புல்லட் ரயில் போன்ற ஆடம்பரத் திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடுசெய்வது எந்த வகையில் பயன்தரும்?' என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் ரயில் பாதைக்கு நிலம் வழங்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜப்பான் அரசுக்கு, புல்லட் ரயில் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கடிதம் எழுதியுள்ளனர். இதனால், இத்திட்டத்துக்கு கடனுதவி வழங்கும் ஜப்பான், சர்வதேச கூட்டுறவு முகமை கடனுதவி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதை புல்லட் ரயில் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அதிவேக ரயில்வே நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.