"ஆப்பிள் எங்கள் தொழில்நுட்பங்களை திருடுகிறது" - குற்றம்சாட்டும் குவால்காம் நிறுவனம் | Qualcomm complaint Apple Stole Its technology Secrets and giving to Intel

வெளியிடப்பட்ட நேரம்: 02:10 (28/09/2018)

கடைசி தொடர்பு:02:10 (28/09/2018)

"ஆப்பிள் எங்கள் தொழில்நுட்பங்களை திருடுகிறது" - குற்றம்சாட்டும் குவால்காம் நிறுவனம்

சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் போட்டி மனப்பான்மையில் சண்டை போட்டுக்கொள்வது இயல்பான ஒன்று. குறிப்பாகத் தொழில்நுட்ப உலகில் சொல்ல வேண்டும் என்றால் ஆப்பிளுக்கும், சாம்சங்கிற்கும் மோதல் இருந்து கொண்டே இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கூட ஏழு வருடங்களாக நடைபெற்ற வழக்கு ஒன்றில் சமரசம் எட்டப்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்ப உலகின் முன்னோடி எனக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் மீது புகார் தெரிவித்திருக்கிறது குவால்காம் நிறுவனம்.

குவால்காம்

குவால்காம் மொபைல் புராஸசர்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஒரு நிறுவனம். பெரும்பாலும் இந்த நிறுவனத்தின் புராஸசர்களே விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும். ஆப்பிளும் அதன் ஐபோன்களில் குவால்காம் நிறுவனம் தயாரிக்கும் புராஸசர்களை பயன்படுத்தி வந்தது. பின்னர் கடந்த வருடம் முதல் அதைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டது. மாறாக இன்டெல் நிறுவனத்தின் புராஸசர்களை ஐபோன்களில் பயன்படுத்தத் தொடங்கியது. தற்பொழுது தங்களின் சிப் தொழில்நுட்பங்களை ஆப்பிள் திருடி இன்டெல் நிறுவனத்திடம் அளிக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறது குவால்காம் நிறுவனம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.