வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (28/09/2018)

கடைசி தொடர்பு:07:36 (28/09/2018)

'பிராந்திய அமைதிக்கு ஒரே ஒரு நாடு தடையாக உள்ளது' - சார்க் நாடுகள் கூட்டத்தில் இந்தியாவைத் தாக்கிப்பேசிய பாகிஸ்தான்

'பிராந்தியங்களின் இணைப்புக்கு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரு தடை உள்ளது' என்று சார்க் நாடுகள் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார். 

சுஷ்மா சுவராஜ்

அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையில், சார்க் நாடுகள் அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'நமது மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு மேம்பட வேண்டும் எனில், பிராந்திய ஒத்துழைப்புக்கு சமூக அமைதியும் பாதுகாப்பும் இன்றியமையாதது. தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்' என்று பேசினார் . பாகிஸ்தான் அமைச்சர் பேசுவதற்கு முன்பாகவே, பாதியிலேயே கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார்.

அடுத்ததாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, 'பிராந்திய ஒத்துழைப்பைப் பற்றி அவர் இந்தக் கூட்டத்தில் பேசினார். பிராந்திய ஒத்துழைப்பைப் பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும் போது, பேச்சுவார்த்தைக்குத் தடை  ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்   பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும்? பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது' என்று மறைமுகமாக இந்தியாவை தாக்கிப்பேசினார்.