வெளியிடப்பட்ட நேரம்: 07:35 (28/09/2018)

கடைசி தொடர்பு:07:51 (28/09/2018)

`10-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவனைப் பாதியில் காப்பாற்றிய இளைஞர்!’ - வைரல் வீடியோ

கஜகஸ்தான் தலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை, குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தரையில் விழுமுன் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

அடுக்குமாடி

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் தலைநகர் அஸ்டானாவில், 12 மாடிகள் கொண்ட குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்தக் கட்டடத்தின் 10-வது மாடியில் சிறுவன் ஒருவன் திடீரென ஜன்னல் வழியாகத் தொங்கிக்கொண்டிருப்பதைக் கீழே உள்ளவர்கள் பார்க்கிறார்கள், கூச்சலிடுகிறார்கள். 7 வயது சிறுவன், மீண்டும் தனது வீட்டுக்குள் செல்ல முயற்சி செய்கிறான். ஆனால், அவனால் முடியவில்லை. கீழே பலர், அவன் விழுந்தால் காப்பாற்றுவதற்கான சில முயற்சிகளைச் செய்ய தயாராகிக்கொண்டிருந்தனர். கையில் கிடைத்த பாய் ஒன்றைப் பிடித்துக் காப்பாற்ற தயார் நிலையில் இருந்தனர். 10 -வது மாடியில் இருந்து விழுவதால், அந்த வேகத்தைத் தாங்க அது போதுமானதாக இருக்குமா என்றும்கூட தெரியவில்லை. 

மீண்டும் வீட்டுக்குள் செல்ல எடுத்த முயற்சி தோல்வியில் முடிய, சிறுவன் 10 -வது மாடியில் இருந்து கீழே விழத் தொடங்குகினான். கூடியிருந்தவர்கள் அனைவரும் கூச்சலிடுகின்றனர். அப்போது 9 -வது மாடியில் இருந்த ஒருவர், அந்தச் சிறுவனை ஜன்னல் வழியாக அலேக்காகப் பிடித்து உள்ளே இழுத்துக் காப்பாற்றிவிடுகிறார். அங்கிருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் ஆரவாரம்செய்கின்றனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் எதிர் கட்டடத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவானது.
  
சிறுவனைக் காப்பாற்றியவரின் பெயர் அர்டியோம் காரேவ். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேசுகையில், ``சிறுவனைக் காப்பாற்றிய பின்னர் நடந்ததுகுறித்து அவனிடம் கேட்டேன். அவன் வெளியே செல்ல வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியுள்ளான். ஆனால், அவர் உடை மாற்றி வருவதற்குள், அவர்களது பெற்றோர்கள் கதவை மூடிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். அதனால் ஜன்னல் வழியாக வெளியேற நினைத்ததாகக் கூறினான். அவனது பதில் அதிர்ச்சியாக இருந்தது. 

முதலில் நான் ரிஸ்க் எடுத்து காப்பாற்றியதை உணரவில்லை. ஆனால் எனது குடும்பத்தினர், அந்த முயற்சியில் சிறுவன் உங்களையும் கீழே இழுத்துக் செல்லும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தனர். அப்போதுதான் அதனை நான் உணர்ந்தேன். சிறுவன் ஒருவன் அந்தரத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது மீட்க முயற்சிக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா?” என்று தெரிவித்துள்ளார்.  

இவரது இந்தச் செயலைப் பாராட்டி, நகராட்சி நிர்வாகம் அவருக்கு 1,400 டாலர் பரிசுத்தொகை அறிவித்தது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், `அவர் அந்தப் பணத்தை வேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர், குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர் யாராவது தங்களது வீட்டில் ஜன்னல்களுக்குப் பாதுகாப்புக் கம்பி அமைக்கக்கூட வசதி இல்லாமல் இருப்பவர்களுக்கு கொடுக்க முடிவு செய்தார்’ என்றனர்.