`ஓடுதளத்தைத் தாண்டி நீர்நிலையில் தரையிறங்கிய விமானம்!’ - படகுகளில் மீட்கப்பட்ட பயணிகள் | Plane fell into water while landing

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (28/09/2018)

கடைசி தொடர்பு:11:22 (28/09/2018)

`ஓடுதளத்தைத் தாண்டி நீர்நிலையில் தரையிறங்கிய விமானம்!’ - படகுகளில் மீட்கப்பட்ட பயணிகள்

பசிபிக் கடலில் உள்ள மைக்ரோனேசியா தீவிலுள்ள விமான நிலையத்தில், இன்று காலை விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள நீர்ப்பரப்பில் விழுந்துவிட்டது. 

விமானம்

Photo: burebasgal/twitter

போன்பேய் விமான நிலையத்தில் இருந்து பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் வழியில்,  ஏர் நியூகினி விமானம் வெனோ தீவில் உள்ள சூக் விமான நிலையத்தில் நின்று செல்லும். பயணிகள் விமானமான இதில்,  47 பேர் பயணம் மேற்கொண்டனர். 36 பயணிகளும் 11விமான ஊழியர்களும் இதில் இருந்தனர். உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் 4-வது ஓடுதளத்தில் தரையிறங்கவேண்டிய விமானம், ஓடுதளத்தைத் தாண்டிச் சென்றி அருகிலுள்ள நீர்நிலையில் இறங்கியது. ரன்வேயில் இருந்து அந்த நீர்நிலை சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த விபத்தில், விமானத்தில் பயணம்செய்த யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.  உடனடியாக படகுகள் மூலம் அதில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். சிலர், நீந்திக் கரைசேர்ந்தனர்.  பெரிய அளவில் காயம் இல்லாதபோதும், பரிசோதனைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த விபத்துகுறித்து பேசிய விமான நிலைய மேலாளர், ``விமான விபத்துக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் இல்லை” என்றார். இந்த விமானம் பப்புவா நியூ கினியாவுக்குச் சொந்தமானது.