பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்! | The first gay wedding in British Royal family

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (28/09/2018)

கடைசி தொடர்பு:15:31 (28/09/2018)

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்!

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்!

தன் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்ததும் நிதானம் இழக்காமல், அத்தனை பழிகளையும் தன்மீது சுமத்திக்கொண்டு கணவன் விரும்பிய வாழ்க்கையைக் கொடுத்துவிட்டு பிரிந்து செல்வார் ஆல்தியா ஜான்சன். இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவந்த `தரமணி' படத்தில் ஆண்ட்ரியாவுக்கு செதுக்கப்பட்ட ஆல்தியா கதாபாத்திரம்போல், பிரிட்டனில் வாழும் ரியல் லைஃப் ஆல்தியா, தன் கணவருக்கு பிடித்தவரை திருமணம் செய்து வைத்துக் கொண்டாடியுள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உறவினரான லார்ட் இவார் மவுன்ட்பேட்டனுக்கும் ஜேம்ஸ் காயில் என்பவருக்கும் கடந்த வாரம் பிரிட்வெல் பார்க் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்தியவர்கள் மவுன்ட்பேட்டனின் முன்னாள் மனைவி பென்னி மற்றும் இவர்களுக்கு பிறந்த மூன்று மகள்களும்தான். தன் கணவரின் விருப்பதைப் புரிந்துகொண்டு, 2011-ம் ஆண்டு பென்னி, மவுன்ட்பேட்டனை விவாகரத்து செய்தார். பிறகு, 2016-ம் ஆண்டு தான் ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்று பொதுமக்களுக்கு தெரிவித்த மவுன்ட்பேட்டன், இரண்டு ஆண்டுகள் கழித்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்துகொண்டார். அரச குடும்பத்தில் நடைபெறும் முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் இதுதான்.

Mountbatten and family

 

திருமணம் முடிந்தபின், தங்களின் திருமணத்தில் பங்குபெற்ற தன் மகள்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீண்ட நன்றியுரையை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் மவுன்ட்பேட்டன். நேரமின்மையால் அரச குடும்பத்திலிருந்து பலர் இதில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களின் வாழ்த்துகளை அனுப்பி வைத்தனர்.

பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, இப்போதுதான் தன் பாலின ஈர்ப்பு குற்றமற்றது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை சிலர் ஆதரித்தாலும், பலர் எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இதுபோன்ற பிரச்னைகளை முழுமையாய் புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும், வெளிப்படையாய் பேசுவதற்கும் நூற்றாண்டுகள் ஆகலாம். ஆனால், இயற்கையான விஷயத்தை மாற்ற முயற்சி செய்யாமல் உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, அனைவரின் ஆசீர்வாதத்தோடு அரச குடும்பத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம், அந்நாட்டில் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.