வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (28/09/2018)

கடைசி தொடர்பு:15:24 (28/09/2018)

`பெரிய விபத்து நடக்குது; உடனே போங்க'! - திருமணத்தன்று தீயணைப்பு வீரரை பணிக்கு அனுப்பிய காதலி

`வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்று நம் முன்னோர்கள் போகிறபோக்கில் சொன்ன வாக்கியத்தை 100% உண்மை என்று நிரூபித்திருக்கிறார் அமெரிக்க இளைஞர் ஒருவர். இந்த க்யூட் கதையைக் கேளுங்க உங்களுக்கும் அது உண்மை என்று தோன்றும்!


திருமணம்

அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்தவர் ஜெர்ரிமி பவுராசா. இவர் செயின்ட் பால் பார்க்கில் தீயணைப்பு வீரராக பணிபுரிகிறார். ஜெர்ரிமி தன் காதலி க்ரிஸ்டாவை திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால், அப்பகுதியில் திருமண ஹால் அனைத்தும் ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்தது. எனவே, தான் வேலை செய்யும் தீயணைப்பு நிலையத்திலேயே வைத்து காதலியைக் கரம்பிடிக்க முடிவு செய்தார். இப்போதுதான் திருமணத்தில் வித்தியாசம் காட்டுவது ட்ரெண்ட் ஆகிவிட்டதே. எனவே, ஜெர்ரிமி இப்படிச் செய்தலில் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

திருமணம்

Photo Credits : December Orpen Photography

தங்கள் திருமண அறிவிப்பை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தினர். க்ரிஸ்டா தன் காதலனின் பணியிடத்தில் தங்கள் திருமணம் நடக்கப் போவதாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். லைக்ஸ் குவிந்தது. ஜெர்ரிமி - க்ரிஸ்டா எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.   செப்டம்பர் 24. தீயணைப்பு நிலையம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வித்தியாசமாகக் காட்சியளித்தது.

திருமணம்

Photo Credits : December Orpen Photography

வெள்ளை நிற திருமண ஆடை, முகத்தில் சிரிப்பு என மாப்பிள்ளையும் பெண்ணும் பளிச்சென்று ஜொலித்தனர். பரஸ்பர முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். மோதிரத்தை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். சிரிப்பொலிகள் நிரம்பியிருந்த அந்த இடத்தில் திடீரென அலாரம் ஒலித்தது.

`அருகிலுள்ள காட்டேஜ் க்ரோவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ அருகில் இருக்கும் வீடுகளுக்கும் பரவுகிறது.  உடனடியாக தீயணைப்பு வீரர்கள் இங்கு வர வேண்டும்’  என்ற அறிவிப்பு ஒலித்தது. ஜெர்ரிமியின் நண்பர்கள் தாங்கள் செல்வதாகக் கூறினர். ஆனால், அங்கு தீ வேகமாகப் பரவி வருவதால் அனைத்து வீரர்களுமே செல்ல வேண்டிய நிலை. சற்றும் யோசிக்காத க்ரிஸ்டா தன் காதல் கணவரின் கைகளைப் பற்றிக்கொண்டு,  `நீங்கள் அங்கு செல்ல வேண்டியது அவசியம். ’Go ahead and go babe’ என்று கூறினார்.

திருமணம்

Photo Credits : December Orpen Photography

ஜெர்ரிமி திருமண உடைகளை மாற்றிக்கொண்டு யூனிஃபார்மில் வந்து நின்றார். அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வரவேற்பு நிகழ்வுக்குக் காக்க வைப்பதற்கு மன்னிக்கவும். வந்து விடுகிறேன்’ என்று கூறி வேனில் ஏறிப் புறப்பட்டார்.  ஜெர்ரிமி வேனில் ஏறி விடைபெறும் காட்சியைப் புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மூன்று மணி நேரம் கழித்து பணிகள் முடிந்து தீயணைப்பு நிலையத்துக்கு ஜெர்ரிமி வந்து சேர்ந்தார். ஆடைகளை மாற்றிக்கொண்டு டின்னர் நிகழ்வில் க்ரிஸ்டாவின் கைகளைப் பற்றிக்கொண்டு நடனமாடினார். காதல் அத்தியாயம் இனிதே தொடங்கியது..!

 `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ .. உண்மைதானே? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க