வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (28/09/2018)

கடைசி தொடர்பு:18:35 (28/09/2018)

ரோஹிங்யா விவகாரத்தில் ஆங் சாங் சூகியின் 'கௌரவக் குடிமகள்' விருது பறிப்பு!- ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் விவகாரத்தில் மியான்மர் நாட்டுத் தலைவி ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையைக் கனடா நாடு பறித்துள்ளது.

ஆங் சாங் சூகியுடன் ஜஸ்டின்

மியான்மரில் ஜனநாயகம் மலர வேண்டி போராட்டம் நடத்திய ஆங் சாங் சூகி 1990-ம் ஆண்டு ராணுவ ஆட்சியாளர்களால் கைது  செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு ஆங் சாங் சூகி விடுதலை ஆனார். 1991-ம் ஆண்டு ஆங் சாங் சூகிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகள் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. 2007-ம் ஆண்டு கனடா நாடு ஆங் சாங் சூகியைத் தங்கள் நாட்டின் கௌரவ குடிமகளாக அறிவித்தது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனித நேயர் ரவல் வாலன்பெர்க், தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, மலாலா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். உலகில் ஐந்து பேருக்கு மட்டுமே கனடா நாடு இத்தகையை கௌரவத்தை வழங்கியுள்ளது. 

கடந்த ஒரு வருடமாக மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ராணுவமே சொந்த மக்களைக் கொன்று குவிப்பதால், 7 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களுடன் இணைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியும் ஆட்சி நடத்தி வருகிறார். ரோஹிங்யா தீவிரவாதிகளை மட்டுமே கொல்வதாக மியான்மர் ராணுவம் கூறியது. ஐ.நா. அமைத்த விசாரணைக்குழு, மியான்மர் ராணுவத் தலைவர் உள்ளிட்ட 5  ராணுவ அதிகாரிகள் மனித உரிமை மீறியிருப்பதைக் கண்டுபிடித்தது. ரோஹிங்ய விவகாரத்தால் ஆங் சாங் சூகி மீதான நன்மதிப்பு சரிந்தது.

இந்த நிலையில், கனடா அரசு ஆங் சாங் சூகி-க்கு வழங்கப்பட்ட 'கௌரவ குடிமகள்' அந்தஸ்தை ரத்து செய்வதாக ஒட்டோவா நகரில் இன்று ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு அறிவித்துள்ளது. ``ரோஹிங்யா மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தடுக்க ஆங் சாங் சூகி தவறிவிட்டதாகக் கூறி விருதைப் பறிக்கும்  தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

``மனித உரிமை மீறல் செயல்களைப் புரிந்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்குத் தொடர்ந்து கனடா நாடு மனித நேய அடிப்படையில் உதவிகளைப் புரியும்'' என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆடம் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க