வெளியிடப்பட்ட நேரம்: 03:57 (30/09/2018)

கடைசி தொடர்பு:03:57 (30/09/2018)

சுனாமி, நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த இந்தோனேசியா - பலி எண்ணிக்கை 384ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது. 

சுனாமி

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியிலுள்ள சுலசேசி தீவிலுள்ள டோங்காலப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, மத்தியப் பகுதியில் பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சுனாமி எச்சரிக்கைத் திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.