வெளியிடப்பட்ட நேரம்: 00:46 (01/10/2018)

கடைசி தொடர்பு:09:08 (01/10/2018)

`அமைச்சர்கள் சந்திப்பில் பர்ஸைத் திருடிய பாகிஸ்தான் அதிகாரி!’ - சிசிடிவி வீடியோவால் சிக்கினார்

நியூயார்க்கில் நடைபெற்ற பாகிஸ்தான் - குவைத் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது குவைத் அதிகாரி ஒருவரின் பர்ஸைத் திருடிய பாகிஸ்தான் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் 73வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகள் இடையேயான சந்திப்புகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசும் வகையிலான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் அதிகாரிகளில் ஒருவர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஒருவரின் பர்ஸைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் குழுவில் இடம்பெற்றிருந்த தொழில் மற்றும் உற்பத்தி அமைச்சக இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஜர்தார் ஹெய்டர் கான் என்பவர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரியின் பர்ஸைத் திருடியது உறுதி செய்யப்பட்டது. அவர் திருடுவது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்த பாகிஸ்தான் அரசு, அவரைக் கைது செய்யவும் உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது.