வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (01/10/2018)

கடைசி தொடர்பு:09:11 (01/10/2018)

‘அவரின் அழகான கடிதங்களால் காதலில் விழுந்தேன்’ - வடகொரிய அதிபர் குறித்து நெகிழ்ந்த ட்ரம்ப்

வடகொரிய அதிபர் மீது தான் காதலில் விழுந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ட்ரம்ப்

வடகொரியா தன் அணு ஆயுதச் சோதனையால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வந்தது. அமெரிக்கா, வடகொரியா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த இரு நாடுகளுக்கும் இடையான போர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போது முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை கடுமையாக விமர்சித்து வந்த வந்த அதிபர் ட்ரம்ப் சிங்கப்பூரில் நடந்த சந்திப்பின்போது வெகுவாக புகழ்ந்து தள்ளினார். 

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறையத் தொடங்கியது. இருப்பினும், இரு தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா கருதியது. கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதம் இல்லாத நிலையை ஏற்படுத்துவதில் போதிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், வட கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ-வின் சுற்றுப்பயணத்தைத் தாமதப்படுத்துமாறு கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். 

இந்நிலையில், நேற்று முன் தினம் அமெரிக்காவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், தான் வடகொரிய அதிபர் மீது காதலில் விழுந்துள்ளதாகத் தெரித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ‘கிம் ஜாங் உன் இரு நாடுகள் குறித்தும் எனக்குப் பல அழகான கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்கள் அவர் மீது என்னைக் காதலில் விழச்செய்துள்ளது. ஆம் நாங்கள் காதலில் விழுந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடைபெற்ற இதே பொதுக்கூட்டத்தில் கிம்மை கடுமையாக விமர்சித்தார் ட்ரம்ப். ஆனால், இந்த வருடம் அதற்கு அப்படியே மாறாக வடகொரிய அதிபரைப் புகழ்ந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிம் இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்பை மீண்டும் சந்திக்க வேண்டும் என விரும்பம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு துருவங்களாக இருந்த இரு நாட்டுத் தலைவர்களுக்கும் தற்போது சிறந்த நட்பு மலர்ந்துள்ளது உலக நாடுகளை வியக்கவைத்துள்ளது.