உணவுக்காக சூறையாடப்படும் கடைகள் - இந்தோனேசிய அவலம் | Indonesians Loot Markets Shortage Of Food, Water

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (01/10/2018)

கடைசி தொடர்பு:09:42 (01/10/2018)

உணவுக்காக சூறையாடப்படும் கடைகள் - இந்தோனேசிய அவலம்

இந்தோனேசியாவில் நிவாரணப் பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்காததால் பொதுமக்கள் கடைகளை சூறையாட ஆரம்பித்துவிட்டனர்.

இந்தோனேசியா


இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. சில மணி நேரங்களில் சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகள் கடற்கரையில் திரண்டிருந்த மக்களின் உயிர்களைப் பலி வாங்கியது. பலி எண்ணிக்கை 800-ஐ தாண்டியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலினால் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பலு நகரம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள் தங்குவதை தவிர்த்து வருகின்றனர். மின்சார சேவையின்றி நகரமே இருளாகக் காட்சியளிக்கிறது. பேரிடரில் நிவாரணப் பொருள்கள் சரியான நேரத்தில் கிடைக்காததால் வீதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அங்கிருக்கும் கடைகளையும், பெட்ரோல் நிலையங்களையும் சூறையாடுகின்றனர். கிடைக்கும் பொருள்களை அள்ளிச்செல்கின்றனர். பாட்டில்களில் பெட்ரோல்களை நிரப்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய பலு நகர மக்கள்  ‘இந்த மோசமான சூழ்நிலை எங்களை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது. உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. சமையல் செய்ய முடியாது. எனவே, கிடைப்பதை எல்லாம் எடுத்துச்செல்கிறோம். நியாயமான விலைக்கு விற்றால் ஏற்றுக்கொள்கிறோம் இதுதான் சமயம் என விலைகளைக் கண்மூடித்தனமாக உயர்த்துகிறார்கள்’ என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் தரப்பில் இருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொட்டலங்கள், கம்பளிகள் ஆகியவை ஹெலிக்காப்டர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இவை அனைத்தும் உரிய நேரத்தில் வந்து சேர்வதில்லை தாமதமாகிறது எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.