நிலநடுக்கத்தால் உயிரிழந்த 1,000 பேர் ஒரே இடத்தில் புதைப்பு! இந்தோனேசியா சோகம் | A mass grave is being dug for the victims of the devastating tsunami and earthquake in Indonesia

வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (01/10/2018)

கடைசி தொடர்பு:19:14 (01/10/2018)

நிலநடுக்கத்தால் உயிரிழந்த 1,000 பேர் ஒரே இடத்தில் புதைப்பு! இந்தோனேசியா சோகம்

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களைப் புதைக்க பிரமாண்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. 

பள்ளம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதியை (Sulawesi island) 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலைகள் பலு நகரத்தில் பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது. மேலும், ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 832-யை எட்டியுள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராணுவத்தினர் தங்களால் இயன்ற அளவு விரைவான மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலு நகரத்தில் உள்ள ஒரு மலையடிவாரத்துக்கு அருகில் சுமார் 1,000 பேரை ஒரே இடத்தில் புதைக்கும் அளவுக்குப் பிரமாண்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பள்ளத்தில்தான் உயிரிழந்த அனைவரையும் புதைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமூக ஆர்வலர்கள் பலர் சேர்ந்து இந்தப் பள்ளத்தைத் தோண்டியுள்ளனர். முதல்கட்டமாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள 545 உடல்கள் மட்டும் இங்கு புதைக்கப்படவுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் பிற மருத்துவமனைகளில் உள்ள உடல்களும் இங்கு கொண்டுவரப்படவுள்ளது. ‘தேவைப்பட்டால் இந்தப் பள்ளம் இன்னும் பெரிதாக்கப்படும்’ என அங்குள்ள ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுலவேசி தீவு முழுவதும் உள்ள சுமார் ஒரு மில்லியன் மக்கள் இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அந்நகர சிறைசாலைகளில் இருந்த  1,425 கைதிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தப்பி ஓடிவிட்டனரா அல்லது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்பது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. 


[X] Close

[X] Close