வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (02/10/2018)

கடைசி தொடர்பு:10:15 (03/10/2018)

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா!

அமெரிக்காவில் பெரியார் அண்ணா பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் விழா

அமெரிக்காவின் முதல் மாநிலம் டெலவரில், தமிழ் நண்பர்கள் இணைந்து நடத்திய தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா செப்டம்பர் 29-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் மாணவ- மாணவியர்களுக்குத் தந்தை பெரியாரின் உருவப்படத்தை மையப்படுத்தி ஓவியப் போட்டியும், அதைத் தொடர்ந்து இரு பெரும் தலைவர்களின் வாழ்வியலை முன்னிலைப்படுத்தி வினாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்வைத் தொடர்ந்து பெரியோர்களுக்கான பேச்சுப்போட்டி``பகுத்தறிவு பகலவன் பெரியார்”, ``கடமை கண்ணியம் கட்டுப்பாடு - பேரறிஞர் அண்ணா” மற்றும் ``அமெரிக்காவும் தமிழ்நாடும் - சமூகநீதி ஓர் ஒப்புமைப் பார்வை” என்கிற தலைப்புகளில் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் இருபெரும் தலைவர்களான பெரியார், அண்ணா அவர்களின் உயரிய பண்பு நலன்களையும், சிறப்புகளையும் அனைவரின் இதயத்திலும் கொண்டு வந்து நிறுத்தினர். போட்டியின் முடிவில் செல்வகுமார், பிரசில்லா,  விஜயலட்சுமி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றனர்.

இந்நிகழ்வில் தமிழ் பண்பாட்டை இனிதே வெளிப்படுத்தும் வகையில் மகளிர் பங்கேற்ற கும்மி அடித்தல் நிகழ்வு பெரும் குதூகலத்தைத் தந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டின் சின்னமான பறை இசையை நண்பர்கள் வெகு சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார். பறை, கும்மி இரண்டும் இவ்விழாவினுடைய சிறப்பம்சமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ``சமூக நீதி காவலர்கள் பெரியார் அண்ணா" என்கிற தலைப்பில் பிரசாத் பாண்டியன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பகுத்தறிவு தலைப்பில் தீபன், சுயமரியாதை தலைப்பில் அல்லி நடேஷ், பெண்ணுரிமை தலைப்பில் மெர்லின், சமூகநீதி தலைப்பில் கிருஷ்ணன் மற்றும் சமத்துவம் தலைப்பில் தேவநாதன் ஆகியோர் இரண்டு தலைவர்களும் சமுதாய உயர்வுக்காக ஆற்றிய பணிகளையும், அவர்களது சிந்தனைகளையும் அவைக்கு அப்படியே படம்பிடித்துக் காட்டினர். பெரியார், அண்ணாவைப் பற்றி பிரசாத் சிறப்பாகப் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவை இரமா ஆறுமுகம் மற்றும் ஜெசிபிரியா பிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் நன்றியுரை கூறினார்.

- ந.க. இராஜ்குமார்