வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (03/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (03/10/2018)

நிலநடுக்கத்துக்கு முன், நிலநடுக்கத்துக்குப் பின்; அதிர்ச்சி தரும் சாட்டிலைட் புகைப்படங்கள்! #Indonesia

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த நிலையில், நிலநடுக்கம் தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தோனேசியா

இந்தோனேசியா நாட்டின் சுலவேசி தீவைக் கடந்த வெள்ளிக்கிழமை கடும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது. இதில் பலு உள்ளிட்ட பல இடங்கள் தரைமட்டமாயின. இந்தப் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கொஞ்சம் சீராகி வந்தாலும், மக்கள் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் மக்கள் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல கடைகளில் கையில் கிடைத்த பொருள்களை எடுத்துச் செல்கின்றனர். அதேபோன்று பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சாட்டிலைட் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

சாட்டிலைட் புகைப்படங்கள்

Photo: Twitter/DigitalGlobe

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களால் ஆன உதவிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்து வருகிறது. இந்த நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,234 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. தோண்டத் தோண்ட உடல்கள் கிடைப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பல இடங்களில் குவியல் குவியலாக  அடக்கம் செய்யப்படும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது. இதுவரை சுமார் 60,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தோனேசியா

இவற்றில் பெரும்பாலான இழப்பைச் சந்தித்தது அந்நாட்டின் சிறிய நகரமான பலு நகரம்தான். இந்த நகரம் பெரும்பாலும் அழிந்துவிட்டது. நிலநடுக்கத்துக்குப் பின்னர் அங்குள்ள நிலப்பரப்பு, உறுதித்தன்மை இல்லாமல் திரவம் போன்று உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பலு நகரம்

Photo: Twitter/DigitalGlobe

பூமி தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தரும் டிஜிட்டல் குளோப் நிறுவனம் நிலநடுக்கத்துக்கு முன்னர் எடுத்த சாட்டிலைட் புகைப்படங்களையும், நிலநடுக்கத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படமும், அக்டோபர் 1-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படமும் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.