வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (03/10/2018)

கடைசி தொடர்பு:19:47 (03/10/2018)

மகாத்மா காந்தியின் உருவம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த உலகின் மிக உயர்ந்த கட்டடம்..!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு துபாயிலுள்ள மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவில் அவரது உருவம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

இந்திய சுதந்திரத்துக்கு அகிம்சை வழியில் போராடிய உலகுக்கு அகிம்சை போதித்தவர் மகாத்மா காந்தி. அவர், இந்தியாவின் தேசப் பிதாவாகக் கொண்டாடப்படுகிறார். அவருடைய 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு, துபாயிலும் மிகச்சிறந்த முறையில் காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. துபாயிலுள்ள உலகின் மிக உயரிய கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடம் முழுவதும் வண்ண விளக்குகளால் காந்தியின் உருவப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டடத்தில் காந்தியின் உயர்ந்த வாசகங்கள் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தன.

அதில், `இந்த உலகில் எந்த மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதுவாக நீ மாறு', 'வன்முறையின் மிக மோசமான வடிவம் ஏழ்மை' உள்ளிட்ட வாசகங்களும் வண்ணங்களால் ஒளிர்ந்தன. துபாய் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. லண்டனின் பிக்காடிலி சர்க்கஸ், வியான்னாவின் வெல்ட் மியூசியம், ரோமின் பேலசோ செனடோரியா உள்ளிட்ட இடங்களிலும் காந்திக்கு மரியாதை அளிக்கப்பட்டது.