'நிலநடுக்கம்; சுனாமி; எரிமலை வெடிப்பு' - பேரிடர்களால் அவதிப்படும் இந்தோனேசியா மக்கள் | the volcano has erupted on the same central Indonesian island hit by an earthquake and tsunami

வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (04/10/2018)

கடைசி தொடர்பு:08:59 (04/10/2018)

'நிலநடுக்கம்; சுனாமி; எரிமலை வெடிப்பு' - பேரிடர்களால் அவதிப்படும் இந்தோனேசியா மக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தற்போது அங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

எரிமலை

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கடந்த மாதம் 29-ம் தேதி 7.5 என்ற ரிக்டர் அளவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலைகள் பலு நகரத்தில் பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் சுலவேசி தீவில் இதுவரை 1,340 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாம்களிலும் சாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட அதே சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள சொபுடான் (Soputan) என்ற எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து 6,000 மீட்டர் உயரத்துக்குத் தொடர்ந்து புகை வெளிவந்துகொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் விளைவாகவே எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிமலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலையிலிருந்து வெளியேறும் புகையினால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், எரிமலைக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொடர் இயற்கை பேரிடர்களால் இந்தோனேசியா மக்கள் பீதியடைந்துள்ளனர்.