வெளியிடப்பட்ட நேரம்: 21:51 (05/10/2018)

கடைசி தொடர்பு:21:51 (05/10/2018)

மனித உரிமைப் போராளி நாடியா; காங்கோ மருத்துவர் முக்வேஜ்! - அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இருவர்

 இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா முராத்துக்கும் காங்கோவைச் சேர்ந்த மருத்துவர் முக்வேஜாவுக்கும் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு

இராக் நாட்டின் சிரிய எல்லைப் பகுதியில் வசித்துவந்த நாடியா முராதத்துக்கு அப்போது 24 வயது. அவர், யாசிதி இனத்தைச் சேர்ந்தவர். 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவரது ஊருக்குள் புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், கண்ணில் சிக்கிய ஆண்களைக் கொன்றனர். பல பெண்களைக் கடத்திச்சென்றனர். அதில், நாடியா முரத்தும் ஒருவர். கடத்திச் செல்லப்பட்ட நாடியா முராத், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமையாக்கப்பட்டார். சுமார் மூன்று மாத காலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நாடியா முராத் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அங்கிருந்து தப்பிய நாடியா முராத், ஐ.நா சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு நேர்ந்த கொடுமைகளை உலகத்தின் முன் எடுத்துவைத்தார். அதன்பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் ஐ.நா அமைப்பின் தூதராக முராத் பணியாற்றிவருகிறார். அவருடைய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. 

காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர், டேனிஸ் முக்வேஜ். அவர், பல ஆண்டுகளாகப் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். முக்கியமாக, போரின்போது பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிப்பதற்கு அவருடைய வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவரது சேவைக்கு நோபல் பரிசு கமிட்டி அங்கீகாரம் அளித்திருக்கிறது. பாலியல் வன்கொடுமையை போருக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களது நடவடிக்கையைப் பாராட்டி அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படுவதாக பரிசுக் கமிட்டி தெரிவித்திருக்கிறது.