ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை | Former South Korean president jailed for 15 years for corruption

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (06/10/2018)

ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

லீ மியுங்-பேக் உட்பட தென்கொரியாவின் முக்கியமான முன்னாள் தலைவர்கள் நான்கு பேர் இதுவரை ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்றிருக்கின்றனர்.

தென்கொரியா

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங்-பேக் (Lee Myung-bak) மீது வைக்கப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையொட்டி அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 11.5 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. லீ மியுங்-பேக் உட்பட தென்கொரியாவின் முக்கியமான முன்னாள் தலைவர்கள் நான்கு பேர் இதுவரை ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றிருக்கின்றனர். 2008 முதல் 2013 வரை அதிபராக ஆட்சியில் இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்ததாகவும் மேலும் ஊழல், மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தனது தம்பி நிறுவனமான DAS மூலம் சாம்சாங் போன்ற எலெக்ட்ரானிக் நிறுவனங்களிடமும் தனது சொந்த உளவுத்துறையிடமும் சட்டவிரோதமாக பணத்தைப் பெற்றுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

``அதிபரின் இத்தகைய செயல்பாடுகள் நேர்மையையும் ஒற்றுமையையும் குலைக்கக்கூடியவை. எனவே, இதுபோன்ற செயல்பாடுகள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்" என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. முன்னதாக 20 வருடங்கள் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என எதிர்த்தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. 

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லீ அப்போதிருந்தே பல்வேறு புறக்கணிப்புகளைச் செய்து வந்துள்ளார். இறுதியாக நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும்விதமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் லீ பங்கேற்கவில்லை. இந்தத் தீர்ப்பையும் குற்றச்சாட்டையும் லீ தீவிரமாக எதிர்க்கிறார். இந்த வழக்கே அரசியல் உள்நோக்கம் உடையது எனவும் கூறியுள்ளார். லீ மியுங்-பேக்குக்கு தற்போது 76 வயதாகிறது. லீ யின் ஆட்சிக்காலத்துக்குப் பின்பு அதிபராகப் பொறுப்பேற்ற பார்க் கீன்-ஹை (Park Geun-hye) மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


[X] Close

[X] Close