வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (06/10/2018)

கடைசி தொடர்பு:08:09 (06/10/2018)

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் தேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் கைது 

விதிமுறைகளை மீறி அவரது விருப்பமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக ஏறக்குறைய ரூ.1,400 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் இளைய சகோதரரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் (Shahbaz Sharif), பாகிஸ்தான் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான்

ஷபாஸ் ஷெரீஃப் பஞ்சாப் மகாணத்தின் முதல்வராக இருந்தபோது குடிநீர்த் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து அவரிடம் விசாரணை நிகழ்த்தப்பட்டது. அந்தப் புகார்களுக்கு திருப்திகரமான பதில்களை ஷாபாஸ் கொடுக்காத காரணத்தால் மேற்கொண்டு விசாரிப்பதற்காக அவரை கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது. 

மூன்று முறை பஞ்சாப் மகாண முதல்வராக இருந்த ஷாபாஸ் ஷெரீஃப் தனது பதவிக் காலத்தின்போது வீட்டுவசதி திட்டங்களையும், குடிநீர் வசதி திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். ஆஷியானா ஹவுசிங் திட்டம் மற்றும் பஞ்சாப் சாஃப் பானி கம்பெனி ஆகிய திட்டங்களின் விதிமுறைகளை மீறி அவரது விருப்பமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக ஏறக்குறைய ரூ.1,400 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது கைதுக்கு எதிராக அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (Pakistan Muslim League-Nawaz) தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.  

ஏற்கெனவே பனமா ஆவண வழக்கில் ஷாபாஸ் ஷெரீஃபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போதுதான் நவாஸ் ஷெரீஃப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஷாபாஸ் ஷெரீஃபும் கைது செய்யப்பட்டுள்ளார்.