விண்வெளிக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்! | NASA send Astronauts space through SpaceX rocket

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:01:30 (07/10/2018)

விண்வெளிக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

 

நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தனது விண்வெளி வீரர்கள் அடுத்த வருடம் முதல் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் மூலமாக அனுப்பப்படுவார்கள் என்று நாசா அறிவித்திருக்கிறது. அதன்படி அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் பால்கன் 9 என்ற ராக்கெட் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளித் துறையில் சமீப காலமாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை அனுப்பவும் சரக்குகளை கொண்டு செல்வதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம்தான் முதன் முதலாக அதில் மனிதர்கள் பயணம் செய்யப்போகிறார்கள். நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும். அது மட்டுமின்றி அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், நிலையத்திற்குத் தேவையான பொருள்களையும் அனுப்ப வேண்டியிருக்கும். இதற்காகத் தனியார் நிறுவனங்களையே தற்பொழுது நாசா நம்பியிருக்கிறது.

ராக்கெட்

நாசா மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்கு ஸ்பேஸ் ஷட்டில் (Space Shuttle) விண்வெளி ஓடத்தைப் பயன்படுத்தி வந்து. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டில் அதற்கு ஓய்வு கொடுத்து விட்டது. அதன் பிறகு நாசா அமெரிக்க விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தையே தற்பொழுது வரை பயன்படுத்தி வருகிறது. அடுத்த வருடம் முதல் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மட்டுமின்றி போயிங் நிறுவனத்தின் ராக்கெட்டுகளையும் பயன்படுத்துவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.


[X] Close

[X] Close