1600 பேரைப் பலிக்கொண்ட இந்தோனேசியா நிலநடுக்கம் : தனிப்பட்ட முறையில் உதவிய ராணி எலிசபெத் | Queen makes the private donation to Indonesia

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (07/10/2018)

கடைசி தொடர்பு:08:25 (07/10/2018)

1600 பேரைப் பலிக்கொண்ட இந்தோனேசியா நிலநடுக்கம் : தனிப்பட்ட முறையில் உதவிய ராணி எலிசபெத்

சமீபத்தில் இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இங்கிலாந்து ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் நிதியுதவி அளித்துள்ளார். 

எலிசபத்

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கடந்த மாதம் 29-ம் தேதி 7.5 என்ற ரிக்டர் அளவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது. 20 அடி உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலைகள் பலு நகரத்தில் பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் சுலவேசி தீவில் இதுவரை 1,649 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து முகாம்களிலும் சாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் தொடங்கபடும் போது உயிரிழப்பு இன்னும் அதிகமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பேசிய மீட்பு படை அதிகாரிகள், “நாங்கள் மீட்பு பணிகளில் ஈடுபடும் போது சிலர் எந்த வேலையில் இருந்தார்களோ அதே நிலையில் இறந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை மீட்பது மிகவும் சவாலாக உள்ளது. இருப்பினும் அவர்கள் இறந்து ஒரு வாரங்கள் ஆன நிலையில் சுகாதார பாதுகாப்புக்கான ஏற்பாடுகளுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட அதி பயங்கர இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இங்கிலாந்து ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் (அரசு சாரா பணம்) 8 மில்லியன் யூரோ நிதியுதவியாக அளித்துள்ளார். இதை பக்கிங்காம் மாளிகை உறுதிசெய்துள்ளது. இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் உதவுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக 2004 சுனாமி, 2013-ல் பிலிபைன்ஸை தாக்கிய ஹையன் சூறாவளி, 2017 மேற்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் வறட்சியின் போதும் ராணி எலிசபெத் தனிபட்டமுறையில் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 


[X] Close

[X] Close