வெளியிடப்பட்ட நேரம்: 08:49 (08/10/2018)

கடைசி தொடர்பு:09:01 (08/10/2018)

இந்தோனேசிய நிலநடுக்கம் - 1700-யைத் தொட்ட பலி எண்ணிக்கை; 5000 பேர் மாயம்

இந்தோனேசியாவைப் புரட்டி போட்டுள்ள பெரும் பேரிடரில் இதுவரை 5000 பேர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவை கடந்த மாதம் 29-ம் தேதி 7.5 ரிக்டர் அளவுவில் கடும் நிலநடுக்கம் தாக்கியது. இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் சுனாமி அலைகளும் அந்தத் தீவை சூறையாடின. 20 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. நிலநடுக்கம், சுனாமியால் சுலவேசி தீவில் உள்ள பெரும்பாலான வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியது. இந்தோனேசிய மக்கள் தற்போது தாங்க முடியாத துயரை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 1,763 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 5000 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

அந்தத் தீவில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் கடும் பாதிப்புக்குள்ளான பலு நகரில் தொடர் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு மட்டும் சுமார் 1000 பேர் காணாமல் போயிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அந்நகரில் உள்ள 3 அடி சேற்றுப் பள்ளத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுவரை அந்தச் சேற்று குழியிலிருந்து 70 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசியப் பேரிடர் குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தோனேசிய பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணப் பொருள்கள் கிடைக்காததால் அங்குள்ள மக்கள் பெரும் துன்பமடைந்து வருகின்றனர். இயற்கை பேரிடரால் சுலவேசி தீவே மொத்தமாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது.