மதர்போர்டுகள் அனைத்திலும் மைக்ரோ சிப்... அமெரிக்காவை மிரட்டும் சீனா! | China Spy Chips found in american companies servers

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (08/10/2018)

கடைசி தொடர்பு:10:23 (08/10/2018)

மதர்போர்டுகள் அனைத்திலும் மைக்ரோ சிப்... அமெரிக்காவை மிரட்டும் சீனா!

மதர்போர்டுகள் அனைத்திலும் மைக்ரோ சிப்... அமெரிக்காவை மிரட்டும் சீனா!

ளவு பார்ப்பது அல்லது வேவு பார்ப்பது...இன்றைக்கு உலகில் இருக்கும் அத்தனை நாடுகளின் அரசுகளுக்கும் பரிச்சயமான ஒரு விஷயம். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு நாடுகளின் அதிகாரமும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. நிலப்பரப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரோ ஒருவரது அதிகாரத்தின் கீழ் இருந்திருக்கின்றன. அது மன்னராட்சியாகவோ, மக்களாட்சியாகவோ இருக்கலாம். இப்படிக் காலம் மாறியிருந்தாலும், அதிகாரங்கள் மாறியிருந்தாலும் மாறாத ஒரே விஷயம் இதுதான். இந்த வேவு பார்க்கும் விஷயம் மட்டும் ஒவ்வொரு முறையும் கைமாறிக் கொண்டே வந்திருக்கிறது. எவ்வளவுதான் நட்பு நாடாக இருந்தாலும் உளவு விஷயத்தில் மட்டும் எதிரிதான். அதனால்தான் இன்றைக்கும் கூட அடுத்த நாட்டை உளவு பார்ப்பது என்பதை மட்டும் யாராலும் நிறுத்தவே முடியவில்லை. உலகில் உள்ள அரசுகள் அனைத்தும் இதற்கென தனித்துறையையே கையில் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட அரசுக்கு உளவுத்துறை இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

உளவு

டிஜிட்டல் காலம் தொடங்குவதற்கு முன்னர் மனிதர்கள்தாம் அந்த வேலையில் ஈடுபட்டு வந்தார்கள். உளவாளி என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் இவர்களின் வேலை எதிரிகளை வேவு பார்ப்பது மட்டும்தான். சில காலம் கழித்து தொழில்நுட்பம் வளரத் தொடங்கிய பிறகு உளவாளிகள் அதையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். அதன் மூலமாக முன்பை விட வேகமாகவும், துல்லியமாகவும் வேவு பார்க்க முடிந்தது. இப்பொழுதெல்லாம் உளவாளிகள் நாட்டின் எல்லைக்கோட்டைத் தாண்டாமலேயே வேலையை முடிக்கிறார்கள். அப்படி சீனா அமெரிக்காவுக்கு அனுப்பிய ஒரு சின்ன உளவாளிதான் இன்றைக்கு டெக் உலகின் ஹாட் டாபிக்.

``ஒரே ஒரு சிப்புதான் மொத்த சர்வரும் நம்ம கையில "- இப்படிக்குச் சீன உளவாளிகள்

அமெரிக்காவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னணி டெக் நிறுவனங்களின் மதர் போர்டுகளில் உளவுக் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்னால் செய்தி வெளியிட்டிருந்தது ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம். அந்த முப்பது நிறுவனங்களின் பட்டியலில் அமேசானும், ஆப்பிளும் இருப்பதை வைத்தே உளவாளிகள் எவ்வளவு பெரிய இடத்தில் கை வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்தப் பட்டியலில் சில அரசு நிறுவனங்களும் இருக்கின்றன. அப்படியென்றால் இந்த உளவு சிப்களை யார் பொருத்தியது என்ற கேள்விக்கு சீனாவின் ராணுவத்தைக் கை காட்டுகிறது ப்ளூம்பெர்க். அப்படியென்றால் சீனாவில் தயாரிக்கப்பட்ட மதர்போர்டுகள் எப்படிச் சரியாக டெக் நிறுவனங்களின் சர்வர்களை சென்றடைந்தது. அவர்களே இங்கே வந்து பொருத்திவிட்டுப் போனார்களா. இப்படி எழுந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சூப்பர்மைக்ரோ நிறுவனத்திடம் இருக்கிறது.

Bloomberg

Photo Courtesy :Bloomberg

அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர்மைக்ரோ (Supermicro) நிறுவனம் சர்வர்களுக்கான மதர்போர்டுகளை விநியோகம் செய்வதில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஒரு நிறுவனம். என்னதான் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட மதர்போர்டுகளை வாங்குவது சீனாவில் இருந்துதான், ஏனென்றால் அங்கேதான் விலை குறைவாகக் கிடைக்கும். அதை வாங்கும் சூப்பர்மைக்ரோ தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இந்த இடத்தில்தான் தங்கள் உளவு வேலையை ஆரம்பித்திருக்கிறது சீன ராணுவம். பென்சில் முனையை விடச் சிறிய அளவில் ஓர் உளவு மைக்ரோசிப்பைத் தயார் செய்திருக்கிறது. அரிசியின் பாதியளவில் இருக்கும் இந்த சிப் பார்ப்பதற்கு வழக்கமாக மதர்போர்டுகளில் பயன்படுத்தப்படும் சிப் போலவே இருக்கும். அதை சூப்பர்மைக்ரோ எந்த நிறுவனங்களிடம் போர்டுகளை வாங்குகிறதோ அங்கே தாங்கள் உருவாக்கிய உளவு சிப்பைப் பொருத்தச் சொல்லியிருக்கிறது சீன ராணுவம். அவர்களும் நாட்டின் நலன் கருதி பொருத்தியிருக்கக்கூடும். அதன் பிறகு உளவு சிப் பொருத்தப்பட்ட மதர்போர்டுகளை வாங்கும் சூப்பர்மைக்ரோ நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதை விநியோகம் செய்யும். அதன் முக்கிய வாடிக்கையாளர்களில் இருவர்தான் ஆப்பிளும், அமேசானும். 

சர்வர்

சர்வர்களில் பொருத்தப்படும் இந்த மதர்போர்டுகள் வழக்கம்போல செயல்படத் தொடங்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அப்படித்தான் தெரியும். ஆனால், உள்ளே நடப்பது வேறு. உளவு மைக்ரோசிப் அதன் பணியைச் செய்யத் தொடங்கும். சர்வர்கள் இணைக்கப்பட்டுள்ள நெட்வொர்க்குகளின் மாற்றியமைக்கும். நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் தகவல்களை வெளியிலிருந்து அணுகுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கும். இதன் மூலமாக எளிதாக அவர்களின் தகவல்களை உளவு பார்க்க முடியும். அதைப் பயன்படுத்தி சில அரசின் ரகசியங்களை அறிந்து கொள்ளவும் முடியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மைக்ரோ சிப்களை முன்னே அனுப்பிவிட்டு அது திறந்து கொடுக்கும் பின் வாசல் வழியாக வேவு பார்க்கும் வேலையை ஆரம்பிப்பார்கள் உளவாளிகள். இப்படித் தங்களின் சின்ன உளவாளியை யாருக்கும் சந்தேகம் வராமல் மிகப்பெரிய நிறுவனங்களுக்குள்ளேயே அனுப்பியிருக்கிறது சீனா.

சீனா

`கடந்த 2015-ம் ஆண்டிலேயே இது போன்ற உளவு சிப் ஒன்றைத் தங்களது சர்வர்களில் ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்து அதை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பிஐ-யிடம் தெரிவித்தது. ஆனால், அந்தத் தகவல் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது' என்றும் குறிப்பிட்டிருக்கிறது ப்ளூம்பெர்க். தற்பொழுது அதைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதில் சம்பந்தப் பட்டுள்ள 3 நிறுவனங்களுமே இந்தச் செய்தியை மறுத்திருக்கின்றன. ``இது தொடர்பாக எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த விதமான புகார்களும் இதுவரை வரவில்லை" என்கிறது சூப்பர்மைக்ரோ நிறுவனம். ஆப்பிளும் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. அமேசான் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் ``ப்ளூம்பெர்க் நிறுவனம் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதே தங்களுக்குப் புரியவில்லை" என்கிறது. உளவு பார்ப்பதில் இருக்கும் ஒரே சிக்கலான விஷயம் இதுதான். பார்த்தவனும் ஒப்புக்கொள்ள மாட்டான், பார்க்கப்பட்டவனும் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள மாட்டான். ஆனால், விஷயம் பெரிதாகவே ஆப்பிள் நிறுவனம் வாயைத் திறந்திருக்கிறது. ``சர்வர்களில் மால்வேர் தாக்குதல் முயற்சி நடைபெற்றது உண்மைதான். ஆனால், அதற்கும் இந்த மைக்ரோ சிப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறது. பிரச்னை இப்படி ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க தானாகவே வந்து வண்டியில் ஏறியிருக்கிறது ஃபேஸ்புக். ``2015-ம் ஆண்டிலேயே சூப்பர்மைக்ரோவின் சர்வர்களில் மால்வேர்கள் இருப்பதைக் கண்டுபிடித்தோம். ஆனால் அந்த சர்வர்களை நாங்கள் பரிசோதனைக்கு மட்டுமே பயன்படுத்தியதால் பயனாளர்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், இதற்கும் அண்மையில் 50 மில்லியன் பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனமே அறிவித்ததற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகம் பலருக்கு எழுந்திருக்கிறது.

இந்த உளவுத் தகவல் உண்மையோ பொய்யோ இதன் மூலமாக கடும் விளைவைச் சந்தித்திருக்கிறது சூப்பர்மைக்ரோ நிறுவனம். இந்தத் தகவல் வெளியானவுடன் அதன் பங்குச்சந்தை மதிப்பு அப்படியே பாதியாகக் குறைந்து விட்டது. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பும் சற்று வீழ்ச்சியடைந்திருக்கிறது. ப்ளூம்பெர்க்கின் இந்தச் செய்தி உலகம் முழுவதிலும் பரவலான அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. இன்றைக்கு மின்னணுச் சாதனங்கள் என்று எடுத்துக்கொண்டால் சீனத் தயாரிப்புகளே உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தாங்களும் ஒரு நாள் வேவு பார்க்கப்படுவோமோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலமாகச் சீன நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மை மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. யாருக்குத் தெரியும்... உங்கள் ஸ்மார்ட்போனில் கூட ஓர் உளவாளி உங்களுக்கே தெரியாமல் வேவு பார்த்துக்கொண்டிருக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்