வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (08/10/2018)

கடைசி தொடர்பு:14:59 (08/10/2018)

"360 கி.மீ வேக புல்லட் ரயிலை நாங்க ஓட்டுறோம்!" சொல்வது யார்?

உலகிலேயே அதிகமான வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலை 2019-ம் ஆண்டுக்குள் இயக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களுக்குப் பயணிக்கவிருக்கும் இந்தப் புதிய புல்லட் ரயிலின் இயக்குதிறன் அதிகரிப்பதற்காக அதன் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் ஜப்பானின் ஷிங்காசென் புல்லட் ரயில் நிறுவனம் முன்பிருந்ததைவிடப் புதுப்புது வடிவங்களைக் கொண்டுவருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

ஜப்பான்

ஆல்ஃபா - எக்ஸ் என்ற அந்தப் புது புல்லட் ரயில் 2019-ம் ஆண்டுக்குள் சோதனை ஓட்டத்துக்கு வந்துவிடும். சோதனை ஓட்டத்துக்குப் பிறகு டோக்யோவின் டொஹொகூ ரயில் பாதையிலும், ஹொக்காய்டோ தீவின் வடக்குப் பாதையிலும் முதலில் இயக்கப்படும். 22 மீட்டர் நீளம்கொண்ட இந்தப் புல்லட் ரயில் அதிநவீனத் தொழில்நுட்பங்களோடு அதிவேக இயங்கு திறன்கொண்டதும் நீளமானதுமாகும். அதன் மூக்குப்பகுதி முந்தையவற்றைவிடக் கூர்மையாகவும் அமைக்கப்பட்டிருப்பதால் ரயிலின் வேகம் எந்தவிதத்திலும் தடைப்படாது. அதோடு ரயிலின் எடையும் குறைக்கப்பட்டுள்ளது. ரயிலுக்குள் கேட்கும் ஓசையையும் அதிர்வுகளையும் இதுவரை இருப்பதைவிடக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்மூலம் பயணம் மேலும் மென்மையானதாக இருக்கும்.

ஷாங்காய் மாக்லெவ் ரயில்

தற்போது இயக்கத்திலிருக்கும் அதிவேக புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. ஆல்ஃபா-எக்ஸ் பயணிக்கப்போகும் வேகம் மணிக்கு 360 கி.மீ. சோதனை ஓட்டத்தில் 400 கி.மீ வேகம்வரை ஓட்டிப்பார்க்க ஜப்பான் ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அதிவேக ரயில்களில் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் மாக்லேவ் ரயில்தான் உலகிலேயே வேகமானது. மணிக்கு 431 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. ஆனால், அதன் தொழில்நுட்பமும் புல்லட் ரயிலின் தொழில்நுட்பமும் முற்றிலும் வேறுபட்டது. இந்த ஆல்ஃபா-எக்ஸ் ஓடத்தொடங்கினால் புல்லட் ரயில்களிலேயே அதுதான் அதிவேகமானதாக இருக்கும். அதிவேக ரயில்களையும் உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.