வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (09/10/2018)

கடைசி தொடர்பு:15:17 (09/10/2018)

`2030-ல் உலக வரைபடமே மாறும்!' - அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை

சர்வதேச அளவில் மிகவும் அச்சுறுத்தும் விஷயமாகத் தற்போது இருப்பது உலக வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றமும்தான். இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் இஞ்சியான் நகரத்தில் நடைபெற்ற ஐ.நா மாநாட்டில், உலகம் அழிவை நோக்கிச் செல்வதாக அறிக்கை  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐநாவின் அறிக்கை

ஐ.நா அறிக்கையின்படி, ஏற்கெனவே 2015-ல் பாரீசில் உலக நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட உலகவெப்பமயமாதல் அளவை 2  டிகிரி செல்ஸியஸ் குறைப்போம் என்ற அளவிலிருந்து மாறி 1.5 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவை ஏற்போமானால் குறைந்தது 4 மில்லியன் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அரை டிகிரி செல்ஸியஸ் வெப்பமாதல் அளவை குறைக்காவிட்டால், 2030-ம் ஆண்டில் எல்லாம் புவியின் வெப்பநிலை மிகவும் அதிகரித்துப் பல்வேறு நிலைகளில் உலக வாழ்க்கை பாதிப்படையும் என்ற அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்தியாவில், 2015-ல் நடைபெற்றது போன்ற ஹீட் வேவ் எனப்படும் வெப்பச் சலனக் கதிர்வீச்சு அடிக்கடி நிகழ்ந்து உயிர் இழப்புகள் பல மடங்கு கூடும் என்றும், அதுமட்டுமன்றி இதனால் பயிர்கள் அழிந்து, விவசாயம் நலிந்து உணவு பஞ்சம் ஏற்படும் என்றும், தண்ணீர்ப் பஞ்சத்தினால் கொத்துக் கொத்தாக மக்கள் புலம் பெயரும் நிலை ஏற்படும் என்றும், காட்டுத் தீ போன்ற இயற்கைச் சீரழிவில், வனஉயிர்கள் அழியும் என்றும் உலகின் பவளப் பாறைகள் எல்லாமே அழிந்து விடும் என்றும் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் ஐநாவின் அறிக்கைஉயர்வதினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கிவிடும் என்றும் அதிர்ச்சித் தகவலை இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகள் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கான தீர்வு நோக்கி,  உலக வெப்பமயமாதல் தடுப்புக்கான செயல்பாடுகளை கையில் எடுக்காவிடில் இந்த உலகின் வரைபடமே சில ஆண்டுகளில் மாறிவிடும் என்று ஐநாவின் அறிக்கைஅறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் நடவடிக்கைகள் எடுத்து, உலக வெப்பமயமாதலின் அளவை அரை டிகிரி செல்ஸியஸ் குறைப்பதனால், தண்ணீர்ப் பஞ்சம் பாதியாகக் குறையும் எனவும் அதீத வெப்பத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், சூழல் பாதிப்புகள், நோய் பரவுதல் குறையும் எனவும் நான்கு இன்ச் கடல் நீர் மட்டம் உயர்வது குறையும் எனவும், மேற்கு அன்டார்டிகாவில் பனிச் சிகரங்கள் கரைவது தடுக்கப்படும் என்றும் பவளப் பாறைகள் பெருமளவு காக்கப்படும் என்றும் இந்த ஐநாவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த அபாயகரமான சூழலில் அதிகத் தொழிற்சாலைகளை கொண்டு, பசுமை வீடு வாயுக்கள் வெளியீட்டில் முன்னிலை வகிக்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நகரங்கள் அதிவிரைவாகச் செயல்பட்டு சுற்றுச் சூழலைக் காத்து, வெப்பமயமாதலை அரை டிகிரி செல்ஸியஸ் குறைக்க முற்பட்டால் உலகம் காப்பாற்றப்பட சிறு வாய்ப்பாக இருக்கும் எனவும் இந்த 728 பக்க ஐநாவின் அதிர்ச்சி அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.