வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:11:45 (10/10/2018)

அடுத்த ஐ.நா தூதுவர் யார்? - ட்ரம்ப்பின் அறிவிப்பும், இவான்காவின் மறுப்பும்!

ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராகப் பணிபுரிந்துவந்த நிக்கி ஹாலே தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவிக்கு இவான்கா ட்ரம்ப் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் 29-வது அமெரிக்கத் தூதராகக் கடந்த வருடம் நியமிக்கபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே,  நேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த ராஜினாமா கடிதத்தை அதிபர் ட்ரம்ப்பிடம் அவர் நேரில் வழங்கியதாகவும், ட்ரம்ப் அதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், என் வேலையை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் தன் பதவியை விட்டு விலக இருப்பதாக, பத்திரிகையாளர்களிடம்  நிக்கி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நம்பிக்கைப் பெற்றவர் நிக்கி. இவர், ட்ரம்ப்பிற்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவிருப்பதாகவும், இவரின் ராஜினாமா தொடர்பான ஆலோசனைகள் இரு தினங்களுக்கு முன்பே வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாகவும் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இவாங்கா

 நிக்கி ஹாலேவுக்குப் பிறகு, அடுத்த தூதுவர் யார் என்பது பற்றி சி.என்.என் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ட்ரம்ப், “எனக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுவருகிறது. அதில், இவான்காவின் பெயரும் உள்ளது. குடும்பத்தினருக்குப் பதவியளிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. இருப்பினும், இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இவான்கா, தன் பணியை சிறப்பாகச் செய்யக்கூடியவர்” என தெரிவித்துள்ளார். 

இவரைத் தொடர்ந்து, இந்தச் செய்தி தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இவான்கா ட்ரம்ப், “ வெள்ளை மாளிகையில் உள்ள திறமை மிக்க சக ஊழியர்களுடன் பணியாற்றுவது பெரும் கௌரவம். தூதுவர் நிக்கிக்கு பதிலாக, வல்லமை மிக்க ஒருவரையே அதிபர் நியமிப்பார். அந்தத் தூதுவர் நானாக இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.