வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (10/10/2018)

`அரசியல் ஒத்துவராது; மூன்றாம் உலகப் போருக்குக் காரணமாகிவிடுவேன்!’ - இந்திரா நூயி

`நான் அரசியலில் இணைந்தால் மூன்றாம் உலகப் போருக்குக் கூட காரணமாகி விடுவேன். அந்த அளவுக்கு வெளிப்படையாக எதையும் பேசிவிடுவேன். அதனால், அரசியலுக்கு எனக்கும் என்றைக்கும் ஒத்துவராது’ என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி.

இந்திரா நூயி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியைக் கடந்த 2-ம் தேதி ராஜினாமா செய்தார். உலகின் முன்னணி குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் 12 ஆண்டுகள் இருந்த இந்திரா நூயி, உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளுள் ஒருவராகக் கருதப்பட்டார். தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து அவர் விலகினாலும், 2019-ம் ஆண்டு வரை அவர் அந்த நிறுவனத்தில் தலைவராகத் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெப்சி நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக ராமோன் லகோர்டா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆசியா சொசைட்டி என்ற தன்னார்வ அமைப்பு இந்திரா நூயியின் சேவைகளைப் பாராட்டி `கேம் சேஞ்சர் ஆஃப் தி இயர்’ (Game changer of the year) என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்திரா நூயியிடன், `பெப்சி நிறுவனப் பணியிலிருந்து விலகிவிட்டதால், அடுத்ததாக நீங்கள் அரசியலில் களமிறங்குவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா? அதிபர் ட்ரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவீர்களா’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த நூயி, `அரசியல் என்றைக்குமே எனக்கு ஒத்துவராது. நான் அரசியலுக்கு வந்தால், மூன்றாம் உலகப் போருக்குக் கூட காரணமாகிவிடுவேன். எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசிவிடும் பழக்கம் உள்ள ஆள் நான். அதனால், அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று கூறினார். மேலும், கடந்த 40 ஆண்டுகளாக தினசரி 18 முதல் 20 மணிநேரம் வரை உழைத்ததாகவும், இனிவரும் நாள்களில் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார். ``வெளிநாட்டுப் பயணங்களின்போது அங்குள்ள தொழிலாளர்களைச் சந்தித்து பரபரப்பான வேலைகளுக்கு இடையில் குடும்பத்தைப் பராமரிப்பது மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது ஆகியவை குறித்து எனது கருத்துகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்’’ என்றும் இந்திரா நூயி தெரிவித்தார்.