`அப்பாவைப் பார்த்ததும் சோர்வெல்லாம் பறந்துடும்!’ - பக்கவாதம் வந்த தந்தைக்குத் தாயான குட்டி தேவதை | 6 years old Girl takes care of her paralysed dad alone

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:14:52 (10/10/2018)

`அப்பாவைப் பார்த்ததும் சோர்வெல்லாம் பறந்துடும்!’ - பக்கவாதம் வந்த தந்தைக்குத் தாயான குட்டி தேவதை

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் 6 வயதுச் சிறுமியின் புகைப்படம் சமூகவலைதளங்களில்  பலரின் மனதைக் கவர்ந்து வைரலாகி வருகிறது. 

தந்தை

PhotoCredits : Facebook/@PamPamworld.1

பெற்றோராய் இருப்பது கொஞ்சம் கடினமான கூடவே மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். குழந்தை பிறந்த பிறகு தாய், தந்தை ஆகிய இருவரின் நடவடிக்கைகளும் மாறத் தொடங்கும். குழந்தை பிறந்தது முதல் அவர்களைப் படிக்க வைத்து திருமணம் செய்து வைக்கும் வரை பெற்றோர்களின் கடமை முடிவதில்லை. அதுவரை குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் செய்து தந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு மாறான ஒரு கதைதான் சீனாவின் நின்க்சியா (Ningxia) மாகாணத்தில் நடந்துள்ளது. 

ஜியா ஜியா (Jia Jia) என்ற 6 வயதுச் சிறுமி பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தந்தையை அவ்வளவு பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறார். 2016-ம் வருடம் நடந்த சாலை விபத்துக்குப் பிறகு 40 வயதான சிறுமியின் தந்தை டியன் ஹைசெங்கின் (Tian Haicheng) கழுத்துக்குக் கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல்படாமல் போய்விட்டது. விபத்து நடந்த அடுத்த 2 மாதங்களில் அவரின் மனைவி, கணவரையும் குழந்தையையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு தன் பெற்றோர், குழந்தையுடன் மட்டுமே டியன் வாழ்ந்து வருகிறார். தாய் விட்டுச் சென்ற பிறகு சிறுமிதான் தந்தையைக் கவனித்துக்கொள்கிறார். 

தினமும் காலை 6 மணிக்குத் தூங்கி எழும் ஜியா அடுத்த அரை மணி நேரம் தந்தையின் கால், கைகளில் மஸாஜ் செய்கிறார். பிறகு அவருக்குப் பல் துலக்கிவிட்டு, காலை அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார். பிறகு தன் வேலைகளைச் சிறுமியே பார்த்துக்கொண்டு பள்ளி புறப்படுகிறார். ஜியா பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் அவரின் தாத்தா, பாட்டி தந்தை டியனைப் பார்த்துக்கொள்கின்றனர். பள்ளி முடிந்து வந்ததும் சிறுமி தந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து இரவு உணவு முதற்கொண்டு அவருக்கு ஊட்டி விடுகிறார். 

``என் தந்தையைப் பார்த்துவிட்டால் எனக்குச் சோர்வே சுத்தமாகத் தெரியாது” என ஜியா ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இந்தக் குட்டி தேவதையின் செயல்கள் இணையத்தில் வெளியாகி அனைவர் மனதையும் நெகிழச்செய்துள்ளது. குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தைத் தந்தை டியன் ஹைசெங் கடந்த 2-ம் தேதி சீன ஆப்பில் (App) பதிவிட்டுள்ளார். அதன் பிறகு தற்போது அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோவர்கள் குவிந்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் செம்ம ஹிட் அடித்து வருகிறது. 

பெற்ற பிள்ளைகளே தங்களின் வயதான பெற்றோர்களைக் காப்பகத்தில் விடும் இந்தக் காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாத தந்தைக்குத் தாயாக இருந்து பார்த்துக்கொள்ளும் இந்தச் சிறுமி பலரது பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். 


[X] Close

[X] Close