வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:55 (10/10/2018)

`கூலிப்படையை வைத்துக் கொல்வதுபோல கருக்கலைப்பு' - போப் ஃபிரான்சிஸ்

கத்தோலிக்க மதத் தலைவராக இருக்கும் போப் ஃபிரான்சிஸ், வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், சற்று முன் நிகழ்த்திய உரையில், ``பெண்கள் எந்தக் காரணத்துக்காகவும் கருக்கலைப்பு செய்வது என்பது கூலிப்படையினரைக் கொண்டு ஒருவரை கொலை செய்து பிரச்னையைத் தீர்த்துக்கொள்வது போன்றதாகும்'' என்று பேசியுள்ளார்.

                                                                  கருக்கலைப்பு

`ஒரு கர்ப்பத்தில், நாம் தலையிடுவது என்பது ஒருவரை அழிப்பதாகும்' எனத் தெரிவித்த போப், மனித உயிருக்கான மதிப்பு குறைந்து வருவதாகவும் போர்கள், மனித உழைப்பை சுரண்டல், அழிவு கலாசாரம், கருக்கலைப்பு ஆகியவை எல்லாம் அதற்கு உதாரணங்கள் எனத் தெரிவித்தார்.

`ஓர் அப்பாவி உயிரை வளரவிடாமல் தடுப்பது எப்படி மருத்துவமாகும். எப்படி நாகரிகமாகும். எப்படி மனிதத்தன்மை ஆகும்' என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் போப்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜென்டினாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் சட்ட மசோதாவை போப் ஃபிரான்சிஸ் எதிர்த்ததால், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பலபேர் அந்நாட்டில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து பலரும் போப்பின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், மீண்டும் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது, உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.