வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (10/10/2018)

கடைசி தொடர்பு:22:12 (10/10/2018)

`ஹப்பிள் தொலைநோக்கி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்!’ - நாசா நம்பிக்கை

விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கியின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

ஹப்பிள் தொலைநோக்கி

வானியல் ஆராய்ச்சியில் ஹப்பிள் தொலைநோக்கியின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1990-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட இது கடந்த 28 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. அன்றிலிருந்து பிரபஞ்சம் தொடர்பான பல முக்கிய புகைப்படங்களை ஹப்பிள் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஹப்பிள் தொலைநோக்கி 'சேஃப் மோட்' நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. நேற்று முன்தினம் நாசா அதை உறுதி செய்திருக்கிறது. தொலைநோக்கியில் உள்ள ஜைரோஸ்கோப் (gyroscope) எனும் கருவி பழுதடைந்துள்ளதாக நாசா தெரிவித்திருக்கிறது.

நாசா

ஜைரோஸ்கோப் எனப்படும் இந்தக் கருவி தொலைநோக்கியை நிலைப்படுத்தும் பணியை செய்யும். அதன் பழைய ஜைரோஸ்கோப்களை கடந்த 2009-ம் ஆண்டில் இறுதியாக மாற்றியமைத்தது. தற்பொழுது ஆறு ஜைரோஸ்கோப்கள் தொலைநோக்கியில் உள்ளன. அதில் மூன்று பழுதடைந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும் கருவிகள் செயல்படத் தொடங்கும். எனவே, இந்தப் பழுது தற்காலிகமானது என்றும் கூடிய விரைவிலேயே தொலைநோக்கி மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் நாசா நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறது.