வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:19:50 (12/10/2018)

இன்ஸ்டாகிராம் மூலம் குழந்தை விற்பனை; தாயைக் கைது செய்து இந்தோனேசிய போலீஸ் அதிரடி!

இந்தோனேசியாவில் 11 மாதக் குழந்தையை 72,000 ரூபாய்க்கு  இன்ஸ்டாகிராம் வாயிலாக விற்க முயன்ற தாயும், இடைத் தரகர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
 

இன்ஸ்டாகிராம்

சமூக வலைதளங்களில், புகைப்படங்களைப் பகிரும் தளம் இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் பல லட்சம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 'கொன்சுல்டன்ஸி ஹாக்கி பிரிவட்’ அதாவது `இதயம் தனியார் ஆலோசனை’ என்ற பெயரில், குழந்தைப் பேறு மற்றும் தத்தெடுப்பது குறித்த ஆலோசனை வழங்கும் தளமாக ஓர் அக்கவுன்ட் இயங்கி வந்திருக்கிறது.

இதில் பதியப்பட்ட கருவில் இருக்கும் குழந்தைகளின் ஸ்கேன் புகைப்படங்களும் வயது, நிறம், மதம் ஆகிய குறிப்புகளோடு பதிவேற்றப்பட்ட குழந்தைகளின் புகைப்படமும் இருப்பது சந்தேகத்தைக் கிளப்ப, அதைக் கண்காணித்த சைபர் பிரிவு போலீஸ், இந்தக் குழந்தைகளைத் தத்து கொடுப்பது என்ற போலி முகமூடியைப் பண பரிவர்த்தனையோடு குழந்தைகள் விற்கப்படுவது அறிந்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது.

உலக அளவில், இந்தோனேசியாதான் ஆள் கடத்தலில் முதலிடம் வகிக்கிறது. ஓர் ஆண்டுக்கு இங்கு கடத்தப்படுவோர் எண்ணிக்கை ஒரு லட்சம் இருக்கும் என யுனிசெப் அமைப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் இப்படி சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சட்ட விரோத செயலில் ஈடுபடுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தடுப்பதில் பெரும் சவால் இருக்கும் என இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.