வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (13/10/2018)

கடைசி தொடர்பு:12:37 (13/10/2018)

‘பழங்குடி இன மக்களின் உரிமைக்காகக் குரல்!’ - மனித உரிமை செயற்பாட்டாளர் பாகிஸ்தானில் கைது!

பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயிலை அந்நாட்டு தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று திடீரெனக் கைதுசெய்தனர்.

குலாலாய் இஸ்மாயில்


பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பகதுங்கவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில், பழங்குடி இனத்தவர்களான பஸ்தூன் இன மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்த இனத்திலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள், கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. இந்நிலையில், இம்மக்களுக்கான உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாகப் போராடிவருபவர், மனித உரிமை செயற்பாட்டாளரான குலாலாய் இஸ்மாயில். இவர், ரஷ்ய நாட்டின் உயரிய விருதான 'அன்னா ஸ்டெபனோவ்னா பொலிட்கோவ்ஸ்காயா' விருதைப் பெற்றவர்.

சில மாதங்களுக்கு முன்பு, கைபர் பகதுங்கவா மாநிலத்திலுள்ள சுவாபி நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குலாலாய் இஸ்மாயில் உள்ளிட்ட 19 பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டன் நகரிலிருந்து விமானம்மூலம் பாகிஸ்தான் திரும்பி, குலாலாய் இஸ்மாயிலை பாகிஸ்தான் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரெனக் கைதுசெய்தனர். இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து, சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்தது. மேலும், எவ்வித முன் நிபந்தனையும் இன்றி, குலாலாய் இஸ்மாயிலை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு குலாலாய் இஸ்மாயில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.