வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (13/10/2018)

கடைசி தொடர்பு:14:53 (13/10/2018)

1,65,000 லிட்டர் பெட்ரோல், மணிக்கு 870 கி.மீ வேகம்... மலைக்க வைக்கும் சிங்கப்பூர் விமானம்!

1,65,000 லிட்டர் பெட்ரோல், மணிக்கு 870 கி.மீ வேகம்... மலைக்க வைக்கும் சிங்கப்பூர் விமானம்!

டைநில்லாமல் தொடர்ந்து 19 மணி நேரம் பறந்து சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகரை சென்றடையும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. 

சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகரம் 15,344 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இரு நகரங்களுக்கிடையே ஏற்கனவே இடை நில்லா விமான சேவையை 9 ஆண்டுகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கி வந்தது. நான்கு இன்ஜீன்கள் கொண்ட A340-500 ரக விமானத்தைச் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு இயக்கிக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 100 பேர்தான் பயணிக்க முடியும். சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் சென்றடைய 2,23,000 லிட்டர் பெட்ரோல் செலவானது. கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து, இந்த விமான சேவையின் லாபம் சரியத் தொடங்கியது. தொடர்ந்து 2013- ம் ஆண்டு இந்தச் சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுத்தியது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

வழக்கமாகச் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் செல்லும் விமானங்கள் ஏதாவது ஒரு நகரத்தில் தரையிறங்கி பெட்ரோல் நிரப்பிய பிறகு மீண்டும் பயணத்தை தொடரும். இதனால், நேர விரயம் ஆவதாகப் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் இடைநில்லா விமான சேவையை தொடங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு செய்தது. அக்டோபர் 11 முதல் இந்தச் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் காலை 11.37 மணிக்கு இந்த விமானம் பயணத்தைத் தொடங்கினால் அடுத்த நாள் காலை 5.27 மணிக்கு நியூயார்க் லிபர்ட்டி விமான நிலையத்தில் தரையிறங்கி விடும். நியூயார்க் நகருக்குச் சென்று விட்டு உடனடியாக மீண்டும் திரும்பும் பயணிகளுக்கு இந்த விமான சேவை உதவியாக இருக்கும். 

நீண்ட தொலைவு பயணத்துக்கு என்றே பிரத்யேகமாக ஏழு A350-900ULR ரக விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் ஒன்றை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இரட்டை இன்ஜீன்கள் கொண்ட இந்த விமானத்தில் 161 பயணிகள் பயணிக்கலாம். 67 பிசினஸ் மற்றும் 94 பிரீமியம் எக்கனாமி வகை இருக்கைகள் மட்டுமே கொண்டது. எக்கனாமி வகுப்பு இருக்கைகள் கிடையாது. பிசினஸ் கிளாஸில் படுத்துக் கொண்டே பயணிக்க முடியும். சிங்கப்பூரில் இருந்து  நியூயார்க் செல்ல இந்த விமானம் 1,65,000 லிட்டர் பெட்ரோல் குடிக்கும். சுமார் 30,000 அடி உயரத்தில் மணிக்கு 870 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விமானம் செல்லும். 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

முன்னதாக தோஹா - ஆக்லாந்து மார்கம்தான் நீண்ட தொலைவு கொண்ட விமானப்பாதையாக இருந்தது. இந்தப் பாதையில் கத்தார் ஏர்வேஸ் இடைநில்லா விமானத்தை இயக்கி வந்தது. கத்தார் ஏர்வேஸின் சாதனையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கும் இடைநில்லா விமானத்தை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ நிறுவனம் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகின் நீண்ட தொலைவு இடைநில்லா விமான சேவை

-----------------------------------------------------------------------------------------

சிங்கப்பூர் - நியூயார்க் (15,344 கி.மீ) - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 

தோஹா - ஆக்லாந்து (14,535 கி.மீ ) - கத்தார் ஏர்வேஸ்

பெர்த் - லண்டன் (14,449 கி.மீ) - குவான்டாஸ் ஏர்லைன்ஸ்

துபாய் - ஆக்லாந்து (14,200) - எமிரேட்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ் - சிங்கப்பூர் (14,113 கி.மீ) - யுனைடெட் ஏர்லைன்ஸ்

ஹூஸ்டன் - சிட்னி (13,834 கி.மீ) - யுனைடெட் ஏர்லைன்ஸ்

சிட்னி - டல்லாஸ் (13,804 கி.மீ ) - குவான்டாஸ் 

சான்பிரான்ஸிஸ்கோ - சிங்கப்பூர் (13,593 கி.மீ) - யுனைடெட் ஏர்லைன்ஸ்

அட்லாண்டா - ஜோகன்ஸ்பர்க் (13,581 கி.மீ) - டெல்டா ஏர்லைன்ஸ் 

அபுதாபி - லாஸ் ஏஞ்சல்ஸ்  (13,502 கி.மீ) - எதிஹாட் ஏர்லைன்ஸ் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க