வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:07:00 (14/10/2018)

பாகிஸ்தானில் இன்று நடக்கிறது இடைத்தேர்தல்- முறைகேடுகளை தடுக்க பலத்த பாதுகாப்பு!

பாகிஸ்தானில், மொத்தம் 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 

தேர்தல்

பாகிஸ்தானில், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கானத் தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தல்களில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினர். பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான இம்ரான்கான் 5 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இப்படி தனிநபர் ஒருவர் ஒரே சமயத்தில், பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இப்படி வென்ற வேட்பாளர்கள் அனைவரும் தற்போது, ஒரேயொரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு தாங்கள் வென்றுள்ள ஏனைய தொகுதிகளின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.  

இந்த வகையில், காலியாக உள்ள 11 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 24 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 372 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.   முதல் முறையாகப் பிரதமர் பதவி பொறுப்பேற்றுள்ள இம்ரான்கானின் கட்சி (பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்) சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இது. முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிப்பும் இந்த இடைத்தேர்தலில் தங்களது கட்சியைப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறச் செய்யும் முனைப்புடன் உள்ளார். எனவே, மொத்த வாக்குச் சாவடிகளுள் சுமார் 848 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு அங்கே பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பரபரப்பான இந்தச் சூழலில், இடைத்தேர்தல் நடைபெறுவதால், பாகிஸ்தான் அதீத ஊடகக் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.