வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:07:21 (15/10/2018)

`இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அல்லது பார்வையற்றவர்கள் தங்களுடன் நாயைத் துணைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அது, தங்களின் எஜமானருக்கு நல்ல வழிகாட்டியாகச் செயல்படும். ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முகமது சலீம் படேல் என்பவர், முதன்முறையாகத் தனது வழிகாட்டியாக குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். குட்டிக் குதிரையான டிக்பைக்கு அடுத்தாண்டு மே மாதத்தில்தான் இரண்டு வயது பூர்த்தியாகும்.

குதிரை

இங்கிலாந்தில் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை வழிகாட்டியாகவும், தங்களது அன்றாட வேலைகளுக்கு உதவும் வகையிலும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோன்ற விலங்குகளுக்குப் பயிற்சியளிக்கும் மையங்களும் அங்கு உண்டு. இந்தவகை விலங்குகள் `அஸிஸ்டண்ட் அனிமல்’ (Assistant Animal) என்று அழைக்கப்படுகின்றன. அந்தவகையில், தனது வழிகாட்டியாக டிக்பி என்ற குதிரையை சலீம் தேர்ந்தெடுத்திருக்கிறார். வரும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில், தனது இரண்டாவது வயதைப் பூர்த்தி செய்யும் டிக்பி குதிரை, சலீமுக்கு வழிகாட்டியாக இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். சிறுவயதில் ஏற்பட்ட ஒரு மோசமான சம்பவத்தால் நாய் என்றாலே தனக்கு அச்ச உணர்வு ஏற்படுவதாகக் கூறும் சலீம், வழிகாட்டியாக குதிரையைத் தேர்ந்தெடுத்தது மிகவும் பயனளிக்கக் கூடியது என்கிறார். 

குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சலீம் பட்டேல் ஜர்னலிஸம் படித்து, தற்போது பிபிசியில் பணியாற்றி வருகிறார். இவர் பார்வை குறைபாடு கொண்டவர். ரெட்டினிஸ் பிக்மெண்டோஸா என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தற்போது குறைந்த அளவிலேயே பார்வை உள்ளது. இன்னும் சில வருடங்களில் பார்க்கும் திறனை அவர் மொத்தமாக இழந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

அவர் சாலையைக் கடப்பதற்கும், சரியான இடத்துக்கு அழைத்துச் செல்லவும் குதிரைக்குப் பயிற்சி அளித்து வருகிறார். 24 வயதாகும் சலீம் கூறுகையில், `இந்தக் குதிரையால், அதன் 40-வது வயதிலும் எனக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால், நாயை வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தால், 8 வருடங்கள் மட்டுமே அதனால் பணியாற்ற முடியும்’’ என்கிறார். 

சலீம்

மேலும் சலீம் கூறுகையில், ``குதிரையால் கூடுதல் காலம் உழைக்க முடியும். இதனால் எனது உதவியாளராக கூடுதல் காலம், அது பணியாற்றும். நான் ஜர்னலிஸம் படித்தேன். தற்போது பிபிசியில் பணியாற்றி வருகிறேன். விரைவில் எனது குதிரைக்கும் பிபிசியில் இடம் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்” என்றார். 

தனது குடும்பம் தொடர்பாகப் பேசுகையில்,``என் அம்மா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். என் தந்தையை திருமணம் செய்துகொள்ள இங்கு வந்தார்கள். எங்கள் உறவினர்கள் குஜராத்தில் உள்ளனர். இந்தியாவுக்குச் செல்வது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம். இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்குச் செல்வதை எப்போதும் விரும்புவேன். வருங்காலங்களில் எனது டிக்பையும் (குதிரை) என்னுடன் இந்தியா வரும்” என்றார்.