2006-ல் 500 பேர்... இன்று மில்லியன் ரீச்... #MeToo கடந்து வந்த பாதை! | Me Too movement was founded in 2006 by Tarana Burke

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (15/10/2018)

கடைசி தொடர்பு:13:50 (15/10/2018)

2006-ல் 500 பேர்... இன்று மில்லியன் ரீச்... #MeToo கடந்து வந்த பாதை!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்ல உருவாக்கபட்ட #MeToo இயக்கம் 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. 

MeToo

கடந்த சில நாள்களாக சமூகவலைதளங்களில் எங்கு பார்த்தாலும் #MeToo பற்றிய விவாதங்கள் தான் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்லத் தயங்கி வந்தனர். ஆனால், தற்போது இந்த ஹாஸ்டாக் மூலம் பலரும் தைரியதாக தங்களுக்கு நடந்தவற்றை வெளியில் கூறிவருகின்றனர். இந்திய சினிமாவில் #MeToo பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதிகமாகத் திரைப் பிரபலங்கள்தான் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் சிறு இயக்குநர், நடிகர்கள் முதல் மிகவும் பிரபலமானவர்கள் வரை பலர் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

MeToo என்றால் ‘நானும்’ என்பது பொருள். இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த #MeToo இயக்கம் கடந்த 2006-ம் ஆண்டு டரானா பர்க் (Tarana Burke) என்பவரால் நிறுவப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இவர், பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டு பிழைத்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்தவற்றை வெளியில் கூற வேண்டும் என்பதற்காக இதை உருவாக்கினார். முன்னதாக டரானா பர்க், இளம் பெண்களின் நலனை முன்னேற்றும் விதமாக ஒரு திட்டத்தை தொடங்கினார். அதில் கலந்துகொண்ட ஒரு பெண், தன் தாயின் இரண்டாவது கணவர் தனக்குப் பாலியல் வன்கொடுமைகளைச் செய்தார் என்பதைத் தெரிவித்து, அதனுடன் மிகச் சாதாரணமாக MeToo என்ற வார்த்தையைக் கூறியுள்ளார். 

பிறகு பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ எண்ணிய டரானா, இதில் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு ட்விட்டர் மூலம் ‘நீங்கள் மட்டும் இல்லை; நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்’ என செய்தி அனுப்பியுள்ளார். முதலில் இவரின் முயற்சி 500 பேரை மட்டுமே சென்றடைந்தது. பின்னர் இதே MeToo வார்த்தையைப் பயன்படுத்தி அமெரிக்க நடிகை அலிஸ்ஸா மிலன் ( Alyssa Milano) ட்விட்டரில் கருத்து பதிவிட இது பல மில்லியன் பேரை சென்றடைந்து பெரும் பிரபலமடைந்தது. 

இந்த இயக்கம் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும் 2017-ம் வருடம்தான் அதிகம் வெளியில் தெரியத் தொடங்கியது. கடந்த வருடம் பல பெண்கள் MeToo மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைத் தெரிவித்து வந்தனர். தற்போது சமூகவலைதளங்கள் தொடர்பான விழிப்பு உணர்வு அதிகமான பின்பு இந்த இயக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. இது இந்தியாவிலும் அதிகமாகவே எதிரொலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.