வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (15/10/2018)

கடைசி தொடர்பு:16:20 (15/10/2018)

`இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கிறார்!' - அரச குடும்பம் அறிவிப்பு; குஷியில் இங்கிலாந்து மக்கள்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசர் ஹாரி, கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை மேகன் மார்களை திருமணம் செய்தார். கோலாகலமாக நிகழ்ந்த இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, இருவரும் பிரிட்டனின் கென்சிங்டன் அரண்மனையில் வசித்துவந்தனர்.

                                 இங்கிலாந்து

இந்நிலையில், கென்சிங்டன் அரண்மனை சற்று முன் மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளது. அதில், இளவரசி மேகன் கர்ப்பமாக உள்ளதாகவும், இதை மக்களிடம் பகிர்ந்துகொள்வதில் இளவரசர் ஹாரியும், இளவரசி மேகனும் மகிழ்ச்சிகொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். அரச குடும்பத்தில் சிறு விசயத்தையும் கொண்டாடும் இங்கிலாந்து மக்கள், தற்போதே இந்தப் புது வரவைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

இவரது சகோதரர் இளவரசர்  வில்லியம்  மற்றும் கேட் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். பிரிட்டிஷ் அரச வாரிசாக தற்போது இளவரசர் சார்லஸ் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் இரண்டாவது இடத்திலும், அவரது குழந்தைகளும் பிரிட்டிஷ் அரியணைக்குத் தகுதிபெறும் பட்சத்தில், பிரின்ஸ் ஹாரியின் ஆறாவது இடத்தைத் தொடர்ந்து இவர்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தை பிரிட்டிஷ் அரியணை ஏறும் வரிசையில் ஏழாவது இடத்துக்கு வரும்.

கென்சிங்டன் அரண்மனை பகிர்ந்திருக்கும் நிலையில், இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுகுறித்து கென்சிங்டன் அரண்மனை, இளவரசி மேகனின் தந்தைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு,பதில் தர மறுத்துவிட்டது. மேகன் உடனான தனிப்பட்ட உரையாடல்களை அவர் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டதால், அரசு குடும்பத்து திருமணம் முதலே தந்தைக்கும் மகளுக்கும் சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மேகனின் தாயார் முதல் பேரக் குழந்தைக்காக தான் காத்திருப்பதாகவும், மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருப்பதால், மேகன் ஜிகா வைரஸ் பரவியுள்ள பிஜி, டோங்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வாரா என்ற அரசு குடும்பத்து விசுவாசிகளின் அக்கறையான கேள்விக்கு," மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே அவர்கள் சென்றிருப்பதால், அவர்கள் பயணத்தில் ஏதும் மற்றம் இருக்காது" என கென்சிங்டன் அரண்மனை பதில் அளித்துள்ளது.