`பராமரிப்புப் பணியின்போது மெக்கானிக்கின் அலட்சியம்!’ - தீயில் எரிந்து நாசமான ரூ.200 கோடி போர்விமானம் | Jet plane was crashed while maintenance work going on

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (15/10/2018)

கடைசி தொடர்பு:18:29 (15/10/2018)

`பராமரிப்புப் பணியின்போது மெக்கானிக்கின் அலட்சியம்!’ - தீயில் எரிந்து நாசமான ரூ.200 கோடி போர்விமானம்

பெல்ஜியம் நாட்டின் விலை உயர்ந்த போர் விமானம் ஒன்று பராமரிப்பின் போது வெடித்ததில், இரண்டு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

ஜெட் விமானம்

Photo: Scramble Magazine

பெல்ஜியத்தில் உள்ள விமான தளத்தில் கடந்த 11ம் தேதி, போர் விமானங்கள் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்நாட்டின் விலையுயர்ந்த முக்கிய விமானங்களில் பராமரிப்புப்  பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு போர் விமானத்திலிருந்து திடீரென்று ஒரு குண்டு  F-16 ஃபால்கோன் விமானத்தைத் தாக்கியது. இதில், அந்த விமானம் தீ பிடித்து எரிந்தது. 

எரிந்த விமானம்

Photo: Scramble Magazine

சம்பவத்தன்று, இரண்டு ஊழியர்கள் ஒரு ஜெட் விமானத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தவறுதலாக ஒரு பீரங்கி இயங்கிவிட்டது. அதிலிருந்து சீறிப்பாய்ந்த குண்டு, எதிரில் எரிபொருள் நிரப்பி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஜெட் விமானத்தில் மோதி வெடித்தது. அந்த  F-16 ரக போர் விமானத்திலும் அதன் அருகிலும் யாரும் இல்லாத காரணத்தால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், விலை உயர்ந்த அந்த ஜெட் விமானம் மொத்தமும் எரிந்துவிட்டது. 

அதேபோன்று, முதல் விமானத்தில் பராமரிப்புப் பணியில் இருந்த இரண்டு  ஊழியர்களுக்கும், கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்,  F-16 விமானத்தில் சுமார் 10,000 லிட்டர் எரிபொருள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாகத்தான் அந்த ஜெட் முழுமையாக எரிந்துள்ளது. 

ஜெட்

Photo: Scramble Magazine

இதுதொடர்பாகப் பேசிய விமானப்படை அதிகாரிகள், ``திட்டமிட்டு நடத்தப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. அதில்தான், இது மனித தவறினால் நடந்ததா, அல்லது தொழில்நுட்பத் தவறினால் நடந்ததா என்பது தெரியவரும்” என்றார். எனினும் பராமரிப்பு பணியின்போது ஊழியர் தவறுதலாக இயக்கியதில் தான் பீரங்கி இயங்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 இந்த விமானத்தின் மதிப்பு, சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய்) என்கிறார்கள். 

ஐரோப்பியக் கண்டத்தில் ராணுவ ஆயுதங்களைத் தவறுதலாகப் பயன்படுத்தும் சம்பவம் இரண்டாவது முறையாக நடந்துள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்பெயினின் போர் விமானம் ஒன்று தவறுதலாக ஒரு ஏவுகணையை இயக்கியது குறிப்பிடத்தக்கது.  


[X] Close

[X] Close