வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (17/10/2018)

கடைசி தொடர்பு:09:50 (17/10/2018)

மீண்டும் செயல்படத் தொடங்கியது யூ-டியூப் இணையதளம்! #YouTubeDOWN

கூகுளின் அங்கமான யூடியூப் இணையதளம் இன்று அதிகாலை முதல் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. 

யூ-டியூப்

நவீன தொழில்நுட்பங்கள் அதிகமாகிவிட்ட யுகத்தில் இப்போது இளைஞர்களை அதிகமாக ஈர்த்திருப்பது சமூகவலைதளங்கள்தான். அந்தவகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றனர். குறிப்பாக யூடியூபில் இப்போது எந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது, எந்த வீடியோவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடையே அதிகமாக உள்ளது. அதுவும் தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் புதுப்பட பாடல், டீசர், டிரெய்லர் போன்றவற்றின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, லைக்குகள் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்ற போட்டிகளும் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே, இத்தகைய இளைய தலைமுறையினரை கவர்வதற்காகவே தினசரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இந்தப் பக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. 

கூகுளின் ஒரு அங்கமாக உள்ள ஸ்ட்ரீமிங் தளமான யூ-டியூப் இன்று அதிகாலை முதல் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. மிகவும் பிரபலமான, பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த இணையதளம் முடங்கியுள்ளதாகப் பலரும் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த இணையதளம் முடங்கியதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் தங்களில் சேவைத் தடை பட்டத்துக்கு வருந்துவதாக யூ-டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ யூ-டியூப் இயங்கவில்லை எனத் தெரிவித்ததற்கு நன்றி. யூ-டியூப் டிவி மற்றும் யூ-டியூப் மியூசிக் ஆகியவை விரைவில் சரிசெய்யப்படும். சரி செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். எங்களின் சேவை தடைபட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

பயனர்களின் புகார்களைத் தொடர்ந்து சிலமணிநேரங்களுக்கு பின்னர் யூ-டியூப் இணையதளம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.  “எங்கள் தளம் சீரமைக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு நேரம் பொறுமை காத்ததற்கு நன்றி. இணையதளத்தில் மீண்டும் இடையூறுகள் இருப்பதாக தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்” என யூ-டியூப் நிறுவனம் பதிவிட்டுள்ளது.