வெளியிடப்பட்ட நேரம்: 04:32 (18/10/2018)

கடைசி தொடர்பு:13:52 (18/10/2018)

`கடவுள் இருக்கிறாரா?' - இறுதிப் புத்தகத்தில் என்ன சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக எழுதி வந்த புத்தகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Brief Answers to the Big Questions என்று பெயரிடப்பட்ட இந்தப் புத்தகம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் அறிவியல் உலகில் இது வரை எழுப்பப்பட்டுப் பல சந்தேகங்களுக்கான விடையை அவர் கூறியிருக்கிறார். மிக முக்கியமான அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் மறைந்தார். அந்தச் சமயத்தில்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை அவர் எழுதிக் கொண்டிருந்தார். திடீரென அவர் இறந்துவிட்ட காரணத்தால் அந்தப் புத்தகம் முழுமையடையாமல் இருந்தது. பின்னர், அவரின் குடும்பத்தினர் அந்தப் புத்தகத்தை எழுதி முடிந்தார்கள்.

Brief Answers to the Big Questions

இதில் பிரபஞ்சத்தின் தோற்றம், வேற்றுக் கிரகவாசிகள், விண்வெளிப் பயணம், செயற்கை நுண்ணறிவு எனப் பல கேள்விகளுக்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் 'கடவுள் இருக்கிறாரா?' என்ற ஒரு பகுதியில் "கடவுள் என்ற ஒருவர் இல்லவேயில்லை. பிரபஞ்சத்தை யாரும் உருவாக்கவில்லை" என்றும், "பல நூற்றாண்டுகளாக என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் கடவுளின் சாபத்துக்கு உள்ளானதன் காரணமாகவே இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக நம்பப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றையுமே இயற்கையின் விதிகளுக்குட்பட்டு வேறு விதமாக விளக்குவதற்கு நான் விரும்புகிறேன்" என்றும் தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.