வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (18/10/2018)

கடைசி தொடர்பு:07:18 (19/10/2018)

பார்த்துப் பார்த்து செதுக்கிய சொகுசு கார்கள் அம்பேல்... விஜய் மல்லையாவுக்கு ஷாக் கொடுத்த லண்டன் நீதிமன்றம்

பிரபல தொழிலதிபரும் ரேஸ் கார் ஜாம்பவானுமான விஜய் மல்லையாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக லண்டன் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

விஜய் மல்லையா
 

நிதிமோசடி புகாரில் சிக்கி, வெளிநாட்டுக்கு பறந்துவிட்ட விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது.
 
இந்த வழக்கு குறித்து ஒரு சின்ன ரீவைண்ட்..

விஜய் மல்லையா தனது ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்‘ நிறுவனத்துக்காக  17 இந்திய வங்கிகளில் ரூ.6,203 கோடி கடன் வாங்கி,  குறித்த காலத்தில் கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கிகள் சார்பில் மல்லையாவுக்கு எதிராக பெங்களூரு கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் 2013-ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் ` விஜய் மல்லையா  செலுத்த வேண்டிய ரூ.6,203 கோடி கடனை ஆண்டுக்கு 11.5 சதவிகித வட்டியுடன், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கும் பணியை வங்கிகள் தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் மல்லையா முறையிட்டார். 

லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி..

லண்டன் உயர்நீதிமன்றம் அந்த வழக்கில் முக்கிய உத்தரவை தற்போது வெளியிட்டுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி நீதிபதி காக்கிரில் வெளியிட்ட உத்தரவின் விவரம் பின்வருமாறு..

இந்திய வங்கிகளில் விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்காக அவரது ஆறு சொகுசு கார்களை விற்றுக்கொள்ள இந்திய அமலாக்கத்துறைக்கு இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ள விஜய் மல்லையா இந்திய வங்கிகளின் கூட்டமைப்புக்கு வட்டியும் முதலுமாக ரூ.10,000 கோடி அளவுக்குக் கடன்பட்டிருக்கிறார். அந்தக் கடனைத் திரும்பச் செலுத்த, அவருக்குச் சொந்தமான ஆறு சொகுசுக் கார்களை விற்றுக் கொள்ளலாம். இந்திய அமலாக்கத் துறை லண்டனில் இருக்கும் மல்லையாவின் இரு வீடுகளிலும் சோதனையிடலாம். அங்குள்ள பொருள்களையும் பறிமுதல் செய்து ஏலம் விடலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

லண்டன் நீதிமன்ற உத்தரவால் விஜய் மல்லையா தன் சொகுசுக் கார்களை இழக்க உள்ளார். அந்த கார்களின் நம்பர் ப்ளேட் உட்பட அனைத்துமே மல்லையா பார்த்துப் பார்த்து செதுக்கியது. உதாரணமாக அவர் வைத்திருந்த போர்ஷ் கேயேன் காரின் நம்பர் ப்ளேட்டில் OOO7 VJM என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஜேம்ஸ் பாண்டை நினைவுபடுத்தும் நம்பர் அது. மேலும், அவரது கார்களில் VJM என்று அவரது பெயரின் இனிஷியல்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்காக அவர் பல கோடி ரூபாய்களைச் செலவழித்திருக்கலாம் என்கிறார்கள். எனவே, நீதிமன்ற உத்தரவால் மல்லையா அப்ஸெட்டில் இருக்கிறாராம்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க